பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நபிகள் நாயகம்

கள் பக்கத்திலே இருந்து கொண்டு 'இஸ்லாத்தில் குடிகாரனுக்கு இடம் இல்லை' என்று சொன்னார்கள். நாயகம், அவர்களைக் கை அமர்த்தி வெகு அமைதியாக 'உனக்கும் இஸ்லாத்தில் இடம் உண்டு' என்று சொன்னார்கள். 'அப்படியா! இனி நான் இஸ்லாத்தில் சேரலாமா?’ என்றான். 'கட்டாயம் சேரலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. இறைவனைத் தொழப் போகும் போது மட்டும் நீ குடிக்கக் கூடாது'. அதற்கவன் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டான், கலிமா சொல்லப் பெற்றது; இஸ்லாத்தில் சேர்ந்தான், அவன் தொழப் போகும் போது குடிக்க இயலாதவன் ஆனான்,

கொஞ்ச நாள் ஆனதும், காலையில் மட்டும் தொழுதால் போதாது, மாலையிலும் தொழ வேண்டும் என்றார்கள். இரண்டு நேரம் போனான். இரண்டு நேரம் குடிக்காமல் இருந்தான். அப்புறம் பகலிலும், அப்புறம் அந்தியிலும், அப்புறம் இரவிலும், ஐந்துமுறை தொழ வேண்டுமென்று அவனிடம் கூறப் பெற்றது. ஐந்து முறையும் தொழப் போக ஆரம்பித்தான். ஐந்து நேரமும் குடிக்க முடியாமற் போய் விட்டது. அப்புறம் ஒரு நாள், இறைவனைத் தொழப் போகும் போது மட்டும், குடிக்காமல் இருந்து பயனில்லை; தொழுது விட்டு வந்த பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் ஒப்புக் கொண்டான். கடைசியில் அவனுக்குக் குடிக்கவே நேரமில்லாமற் போய் விட்டது. தொழ வேண்டிய நேரம் ஐந்து என்று வைத்து, பிறகு, இறைவனைத் தொழப் போகும் போது குடிக்கக் கூடாது. பிறகு, வந்ததும் குடிக்கக் கூடாது என்று வைத்தால், பிறகு எந்த நேரம் குடிப்பான்? இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இறைவனோடு அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டவர்கள். தீய சொற்களைச் சொல்ல