பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


ஒரு பையில் ஆயிரம் வெள்ளிக் காசுகள் இருந்தன. அவன் அவைகள் அனைத்தையும் அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டு, யாரிடமும் எவ்விதத் தகவலும் சொல்லாமல், அறையின் கதவை மெதுவாக அடைத்துவிட்டு வெளியே சென்றான். விடுதிக்காவற்காரன் அப்போது சந்தைக்குச் சென்றிருந்ததால், அவனுக்கும் சாயக்காரன் வெளியேறியது தெரியாமற் போயிற்று.

  அபு கிர் நேராகக் கடைத்தெருவுக்குச் சென்று, உயர்ந்த உடைகள் வாங்கி அணிந்துகொண்டான். அவைகளின் விலை ஐந்நூறு திர்ஹம்! பிறகு அவன் நகரைச் சுற்றிப் பார்க்கலானான். வழியில் வயிறு நிறையப் பல விதமான உணவுகளை வாங்கிப் புசித்துக்கொண்டான். மற்ற நகரங்களைப் போல் இல்லாமல் அந்த நகரம் சில விதங்களில் புதுமையாயிருப்பதாக அவன் கருதினான். மக்கள் அணி ந்திருந்த உடைகளையெல்லாம் அவன் கவனித்தான். அவை அனைத்தும் ஒன்று வெண்மை நிறமாயிருந்தன. அல்லது நீல நிறமாயிருந்தன. இந்த இரண்டு நிறங்களைத் தவிர, வேறு நிறமே அவன் கண்களில் படவில்லை. அவன் ஒரு சாயக்காரன் கடைக்குள்ளே சென்று, தன்னுடைய துண்டு ஒன்றுக்குச் சாயம் பிடிக்க வேண்டுமென்று கோரினான். கடைக்காரன் அதற்கு இருபது திர்ஹம் வேண்டுமென்று கேட்டான். எங்களுடைய நாட்டில் இரண்டு திர்ஹம்தான் கொடுப்பது வழக்கம்!’ என்றான்அபு கிர். கடைக்காரன், அப்படியானால் அங்கேயே போய்ச் சாயம் பிடியுங்கள்!’ என்று சொன்னான். 
அபு கிர், இருபது திர்ஹம் கொடுத்தால், நீர் என்ன சாயத்தில் முக்கிக்கொடுப்பீர்?' என்று கேட்டான்.

'நீலச் சாயம்.' 'எனக்குச் சிவப்புச் சாயம் வேண்டும் !’ ‘சிவப்புச் சாயம் பிடிக்க எனக்குத் தெரியாது !’ ‘அப்படியானால் பச்சைச் சாயம் போதும் !’ 'பச்சையும் பழக்கமில்லை.’