பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


இவ்வாறு கூறிவிட்டு, அபு ஸிர் தன் பழைய நண்பனின் கையைப் பிடித்து உள்ள அழைத்துச் சென்றான். அவன் உடைகளைக் களைந்த பின்பு, தானே அவனுக்குத் தைலம் தடவி, சோப்புத் தேய்த்து, குளிர்ந்த நீரில் அவனை நீராட்டி வைத்தான். குளித்து, உடைகளை அணிந்துகொண்டு அவன் வெளியே வந்ததும், அவனுக்கு உணவும் சர்பத்தும் தயாராக யிருந்தன. அவனுக்கு நடந்த மரியாதைகளையெல்லாம் பார்த்து, அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சாயக்காரன் வெளியே புறப்படு முன், நண்பனுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று விரும்பினான். உடனே அபு ஸிர், "உன்னிடத்திலும நான் ஊதியம் பெறவேண்டும்.? நீ என் நண்பன், நமக்குள் வேற்றுமையே கிடையாது!' என்று சொல்லி மறுத்துவிட்டான்.

அப்பொழுது அபு கிர், "என் அருமை நண்பா! உன்னுடைய ஹம்மாம் அழகாய்த்தான் இருக்கிறது: ஆயினும் இங்கு ஒரே ஒரு குறைமட்டும் இருப்பதாகத் தோன்றுகிறது" என்றான். அது என்ன?’ என்று மருத்துவன் கேட்க, அவன்,

"கத்தியால் மழிக்காமலே உடலிலுள்ள உரோமங்களை அப்புறப்படுத்தும் தைலம் ஒன்று இருக்கிறது: கொஞ்சம் பாஷாணம், தாளிக்காத சுண்ணாம்பு, எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து வைத்தால் போதும், இதுதான் உரோம சம்ஹாரித் தைலம்! இதை நீ தயாரித்து வைத்துக்கொண்டு, அடுத்த தடவை அரசர் வரும்பொழுது, அவருடைய உடலில் தடவினால், அரசர் மிகவும் மகிழ்ச்சியடைவார்!" என்று கூறினான். பாஷாணம் கொடிய விடம் என்றோ, சுண்ணாம்பு காரமானது என்றோ அஞ்ச வேண்டியதில்லை என்றும், இரண்டையும் எண்ணெயில் கலந்தால் நல்ல தைலமாகிவிடும் என்றும் அவன் உறுதி கூறினான்.

கபடமில்லாத மருத்துவன், "அவ்வண்ணம் உடனே தைலம் தயாரித்து வைக்கிறேன்!” என்று உறுதி சொன்னான், அபு கிர்,அவனிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் பரிவாரங்களுடன் வெளியே சென்றான்.