பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


மாலுமிகளின் தலைவரும் அவன் நிரபராதியாகவே இருப்பானென்று நம்பினார். அவர் கூறியதாவது: "அரசரிடத் தில் உமக்கு வேறு எவருக்கும் இல்லாத செல்வாக்கு இருந்து வந்தது. உம்முடைய அதிருஷ்டத்தையும் செல்வத்தையும் கண்டு பொறாமை கொண்ட எவனோ, மன்னரிடம் உம்மைப் பற்றிக் கோள் சொல்லி, அவர் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கியிருக்கவேண்டும். அதனால் அவர் உம்மிடத்தில் அளவு கடந்த கோபம் கொண்டுவிட்டார். ஆயினும், நீர் கவலைப்பட வேண்டாம் ! உமக்கு ஒரு தீங்கும் நேராது! முன் பின் பழக்கமில்லாத என்னிடம் நீர் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக, நான் உம்மை விடுதலை செய்கிறேன் ! ஆனால், நீர் இந்தத் தீவில் என்னுடனேயே இருக்க வேண்டும். உம்முடைய நாட்டிற்குச் செல்லக்கூடிய கப்பல் ஏதாவது இந்தப் பக்கம் வரும்வரை, நீர் என் விருத்தாளியாக இருந்துவிட்டு, பிறகு, வெளியே யாருக்கும் தெரியாமல், கப்பலில் ஏறி உமது தாயகத்திற்குச் செல்லலாம் !"
 அபு ஸிர் அவருடைய கையை முத்தமிட்டு, பன்முறை அவருக்கு நன்றி கூறினான்.
 பின்னர், மாலுமிகளின் தலைவராகிய கப்பித்தான் ஒரு கோணி நிறையச் சுண்ணாம்புக் கற்களை அடைத்துக் கொண்டு, ஒடத்திலேறி, அரண்மனைப் பக்கம் செல்லுவதற்குத் தயாரானார். அப்பொழுது அவர் மருத்துவனைப் பார்த்து,"ஒவ்வொரு நாளும் நான் இங்கிருந்து மீன் பிடித்து அரண்மனைக்கு அனுப்புவது வழக்கம். இன்று என் மனமே சரியாயில்லை. அரண்மனை ஏவலாளர்கள் வந்து மீன்கள் இல்லாமல் வெறுங்கையோடு திரும்பவேண்டியிருக்கும். நீர் இதோ இருக்கும் வலையை எடுத்துக்கொண்டு கடல் ஓரத்திலே கிடைக்கும் மீன்களைப் பிடித்துக்கொண்டிரும். இடையில் நான் இந்தக் கோணியைக் கொண்டுபோய், அரண்மனைக்கு எதிரில் கடலிலே போட்டுவிட்டு வருகிறேன். அரசர் உம்மையே கோணியில் அடைத்துக் கடலில் தள்ளுகிறேன் என்று எண்ணிக் கொள்ளட்டும் ! ஆண்டவன்தான் எனக்குத் துணை நிற்க வேண்டும்!"என்று கூறிச் சென்றார்.