பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

  ஓடம் அரண்மனைப் பக்கம் சென்றதும், மேல் மாடத்தில் ஒரு சாளரத்தின் அருகில் அமர்ந்திருந்த அரசரைக் கப்பித்தான் கண்டு வணங்கினார். "இவனைக் கடலில் தள்ளி விடட்டுமா?" என்று அவர் மன்னரிடம் கைகளால் சாடை காட்டிக்கொண்டே கேட்டார். மன்னர், "தள்ளிவிடும்!" என்று வாயால் கூறியதுடன், தம் வலக்கையை வெளியே வீசிச் சாடையும் காட்டினார். அப்பொழுது அவர் கையிலிருந்து பளபளப்பாக மின்னிக்கொண்டிருந்த ஒரு பொருள் கடல் நீரில் விழுந்தது. அது அவருடைய முத்திரை மோதிரம்! அத்துடன் அது மந்திர சக்தியுள்ளது. அந்த மோதிரம் விரலில் இல்லாவிட்டால், அரசர் நெடுநேரம் ஆட்சி செய்ய முடியாது. படை வீரர்கள் அவருடைய ஆணைக்குப் பணியமாட்டார்கள். அவர்கள் அவரையே வதைத்துவிடுவார்கள்! அந்த மோதிரத்தைக் கையில் அணிந்துகொண்டிருக்கையில், எவரும் மன்னரை எதிர்க்க முடியாது. அவர் அம்மோதிரத்தை எதிரிக்கு நேரே நீட்டினால், அதிலிருந்து ஓர் ஒளி கிளம்பி, எதிரியைக் கொன்று விடும். அத்தகைய அபார ஆற்றல் வாய்ந்த ஆழி கடலில் வீழ்ந்துவிட்டதில் அரசர் தமது ஆவியே ஒழிந்துவிட்டதாக எண்ணி வருந்தினார். ஆயினும், அது தொலைந்துவிட்டதை வெளியே எவருக்கும் சொல்லாமல், அவர் மறைத்துக்கொண்டார். ஆனால், மாலுமிகளின் தலைவர் ஒளியுடைய மந்திர மோதிரம் கடலில் விழுந்ததை முன்பே கவனித்துக்கொண்டார்.
 இதற்கிடையில் அபு ஸிர் கடலில் வலை வீசியதில் ஏராளமான மீன்கள் கிடைத்திருந்தன. அவன் அவைகளைக் கரையிலே கூடைகளில் சேர்த்து வைத்திருந்தான். அவனும் பல நாட்களாக மீன் கறி உண்ணாதிருந்ததால், தனக்கும் கப்பித்தானுக்குமாக நல்ல மீன்களாகச் சிலவற்றை ஒதுக்கி வைத்துக் கொண்டான். அவைகளிலே ஒரு பெரிய மீனை எடுத்து, அவன் அதைக் கத்தியால் பிளந்தான். கத்தி  

ஏதோ உலோகத்தில் தட்டுவதுபோல் ஓசை கேட்டதும், அவன் மீனின் உடலுக்குள் உற்றுப் பார்த்தான். ஒளி மிகுந்த தங்க மோதிரம் மீன் வயிற்றில் இருப்பதைக் கண்டு, அவன் அதை வெளியே எடுத்துத் தன் வலக்கை விரல் ஒன்றில் அணிந்துகொண்டான்.