பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


பணத்திற்குச் சிற்றுண்டிகளும், மதுவும் வாங்கி அருந்திவிடு வான். பின்னர், வாங்கி வைத்த துணியை விற்று, கிடைத்த காசையும் செலவழித்துவிடுவான். எவ்வளவு பணம் வந்தாலும், அவனுக்குப் போதாது; உருசியுள்ள பண்டங்களில் அவனுக்கு விருப்பம் அதிகம்; மது வகைகளிலும் உயர்ந்தவைகளையே அவன் வாங்கிக் குடிப்பான். இந்த நிலையில் துணி கொடுத்தவர் திரும்ப வந்து, வேலை முடிந்துவிட்டதா என்று கேட்டால், "நாளைக் காலையில், பொழுது விடியுமுன்னால் வாருங்கள், துணியில் சாயமேற்றி வைக்கிறேன்!” என்று அவன் சொல்லி யனுப்புவான். வந்தவர், இன்று, நாளை என்று இவரிடம் அலைவதுதான் மிச்சம்!” என்று சொல்லி வருந்திக்கொண்டே போவார். மறுநாள் அவர் குறித்த நேரத்தில் வந்து கேட்டால், "நாளை வாருங்கள்! நேற்று நான் சாயம் காய்ச்சவில்லை. வீட்டில் விருந்தாளிகள் வந்திருந்தனர். நாளைக் காலை, பொழுது புலருமுன்பே வந்து வாங்கிப் போங்கள்!” என்பான். மூன்றாம் நாளும் அவர் வந்து கேட்டால், வீட்டில் என் மனைவிக்கு உடம்பு சரியாயில்லை. அவளுக்கு வைத்தியம் செய்யவே நேரம் சரியாகப் போய்விட்டது. நாளை கண்டிப்பாக வேலை முடிந்துவிடும், வந்து சாயமேற்றிய துணியை வாங்கிக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி, அவன் அவரை வழியனுப்பி வைப்பான். நான்காம் நாளும் அவர் தொடர்ந்து வந்துவிட்டால், அன்றும் அவன் புதிதாகச் சாக்குப் போக்குச் சொல்லி, மறுநாள் வரும்படி கேட்டுக்கொள்வான். வாடிக்கைக்காரர், நாளை, நாளை’ என்று அவன் சொல்லுவதில் வருத்தமடைந்து, என் துணியையாவது திருப்பிக்கொடும்!” என்று கண்டிப்பாகக் கேட்டால், அபு கிர், 'அன்பரே! உங்களுடைய துணியைச் சாய மேற்றிக் கொடியில் உலர்த்தி வைத்திருந்தேன். எவனோ அதையும், அத்துடனிருந்த மற்றைத் துணிகளையும் அடித்துக் கொண்டு போய்விட்டான். உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமாயிருக்கிறது. மக்களை இப்படி ஏமாற்றித் திருடுகிறவர்களை ஆண்டவன் சும்மா விடமாட்டான்!” என்பான். வாடிக்கைக்காரர் நல்லவராயிருந்தால், 'ஐயோ, பாவம்! உனக்கு இப்படி நஷ்டம் வரலாமா?’ என்று வருத்தப் பட்டுவிட்டுப் போய்விடுவார். அவர் முரடராயிருந்தால்,