பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஒரு பழைய கனவு 257

"உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்?" - கேள்வி! சிரிப்பொலி! தூக்கி வாரிப் போட்டது எனக்கு தாராதான் கேட்டாள்.

"இல்லை. இன்னும் எனக்குத் திருமணமே ஆகவில்லை!." பதில் கூறினேன் நான்.

"ஏன் செய்து கொள்ளவில்லை?" கேள்வி அதே கிண்கிணிச் சிரிப்பு! என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திணறிப் போய் மலங்க விழித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

என் மனத்தில் ஒரே வியப்பு! இந்த மலைநாட்டுச் சிங்கள யுவதிக்குச் சூது, வாது எதுவுமே தெரியாதா? இவளைச் சரியானபடி மடக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, “அது சரி! உனக்குத் திருமணமாகிவிட்டதா?’ என்று வேண்டுமென்றே தெரியாதது போலக் கேட்டேன்.

அப்போதாவது அவளுடைய முகத்தில், சிரிப்பில், பார்வையில் நாணம், தயக்கம், பயம், கூச்சம் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாந்தேன். நாணமோ, பயமோ, கூச்சமோ, தயக்கமோ சிறிதும் இல்லாமல் அதே நிமிர்ந்த பார்வையோடு, அதே சிரிப்போடு "இன்னும் ஆகவில்லை” என்று தலையை ஆட்டினாள். ஒய்யாரமாக அந்தத் தலை அசைந்த போது என் இதயமே அசைந்தது. பயங்கரமாகக் கொட்டிய அந்த மழை நிற்கும்போது இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. கிழவியும் தாராவும் விடாப்பிடியாக வற்புறுத்தவே அந்தக் குடிசையில் அவர்கள் அன்போடு அளித்த ரொட்டி, பழங்களைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். அவர்கள் அன்பு என்னை பிரமிக்க வைத்தது.

"மழை நின்றுவிட்டது! போய் வரட்டுமா?" பையிலிருந்து கார்ச் சாவியை வெளியில் எடுத்துக்கொண்டு விடைபெறுவதற்காக அவர்களை நோக்கிக் கைகூப்பினேன். அவர்கள் திகைத்தனர். பயந்த குரலில் கண்களை அகல விரித்து, "என்ன? இந்த இருட்டிலேயா?" என்றாள் தாரா.

"கார் இருக்கிறது! வசதியான ரோடுகள் இருக்கின்றன. இருட்டு என்னை என்ன செய்யும்?" என்று பதில் சொன்னேன்.

"நீங்கள் எங்கே போக வேண்டும்?"

"ஏன்? இரவு 'பெலிஹூலோயா ரெஸ்ட் ஹவுஸில்' போய்த் தங்கிவிடலாமென்று நினைக்கிறேன்.”

நான் கூறியதைக் கேட்டு இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டே இடி இடியென்று கேலி சிரிப்புச் சிரித்தாள் தாரா.

"என்ன? ஏன் சிரிக்கிறாய்?"

"ஒன்றும் இல்லை! இந்த வழிகளில் இதற்கு முன்பு வந்து பழகியிருக்கிறீர்களோ?"

"ஏன், பலமுறை வந்திருக்கிறேனே!"

"பலமுறை வந்த லட்சணம்தான் இவ்வளவு நன்றாக வழி கண்டுபிடித்து வந்திருக்கிறீர்களோ? பெலிஹூலோயா போவதற்கு யாராவது 'உலப்பனை' வரை

நா.பா. 1 - 17