பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஒரு பழைய கனவு * 259

சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர வேறெவையுமே நடக்க முடியாதென்ற நம்பிக்கையா இவளுக்கு? எல்லோருக்கும் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தால் உலகம் எப்படி இருக்கும்?

"வாருங்கள் போகலாம்!” அவள் என்னையும் முந்திக் கொண்டு கார் நின்ற இடத்தை நோக்கி நடந்தாள். மலைத்துப் போய் நின்று கொண்டிருந்த நானும் நடந்தேன்.

காரில் அவள் முன் ஸீட்டில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபோது இன்னும் தூக்கிவாரிப் போட்டது எனக்கு. "நீ பின் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டால் நல்லது”.

"பரவாயில்லை! இங்கேயே இருக்கிறேன். இப்படி இருந்தால்தான் ரோடுகள் இடத்தில் உங்களுக்கு வழிகாட்ட முடியும்” என்று சொல்லிச் சிரித்தாள் அவள், வேற்றுமை, கூச்சம், நாணம் இவற்றில் எதையுமே மருந்துக்குக் கூடப் படைத்தவன் வைக்கவில்லை போலும். முன் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டதற்கு அவள் கூறிய காரணம் பொருத்தமாக இருந்தாலும் என் மனத்தில் வேறுவிதமான சந்தேகங்கள் உண்டாயின. அழகான, இளம்பெண்களைப் பயன்படுத்தி அங்கங்கே நடைபெறும் நூதனக்கொள்ளைகள், வழிப்பறிகளைப் பற்றிப் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகள் வந்த கொண்டிருந்தன. அந்த வகையில் ஏதாவது இருக்குமோ என்றுகூட நினைத்துப் பயந்தேன். கார் குடிசைக்கு அருகிலிருந்து புறப்பட்டது. தாரா பாதைகளை விளக்கிக் கூறினாள்.

இறுதி இதழ்

பெலிஹூலோயா ரெஸ்ட் ஹவுஸை அடையும் போது இரவு இரண்டரை மணி. ரெஸ்ட் ஹவுஸ் காவல்காரனை எழுப்பி இடம் கேட்டோம்.

“எனக்கு ஒரு அறையும், இந்தப் பெண்ணுக்கு ஒரு அறையும் தனித்தனியே வேண்டும்” - என்றேன் நான்.

“ரெஸ்ட்ஹவுஸில் அநேகமாக எல்லா அறைகளிலும் ஆட்கள் தங்கியிருக் கிறார்கள். ஒரே ஒரு அறை வேண்டுமானால் உங்களுக்காக ஒழித்துக் கொடுக்கலாம்.” - காவல்காரன் பதில் கூறினான்.

நான் அவநம்பிக்கையோடு தாராவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். "பரவாயில்லை! ஒரு அறை போதும். இரண்டு பேரும் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்!” தாரா காவல்காரனிடம் கூறினாள். அவளுக்குத்தான் அந்நியனை அந்நியனாக நினைக்கத் தெரியாதே! காரைப் பூட்டி ரெஸ்ட் ஹவுஸின் ஷெட்டில் கொண்டு போய் நிறுத்தினேன்.

தாராவை அழைத்துக் கொண்டு ரெஸ்ட் ஹவுஸில் எங்களுக்காகக் கொடுத்த அறைக்குள் நுழைந்தேன். அறையில் ஒரே படுக்கைதான் இருந்தது. காவல்காரனைக் கூப்பிட்டு இன்னொரு படுக்கை போடச் சொல்வதற்காக வெளியே வந்தேன். இன்னொரு படுக்கைக்காகக் காவல்காரனிடம் தகராறு செய்து கொண்டிருந்தபோது உள்ளே தாராவின் கூச்சல் கேட்டது. என்னவோ ஏதோ என்று பதறிப்போய் ஒடினேன்.