பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தன் பெண் நினைவு தெரிந்த பின் ஒரு தடவையாவது ஊருக்கு வந்து போகவில்லையே என்று நெடுநாளாக ஒரு ஏக்கம் சூசைக்கு இருந்தது. திருமணம் ஆனபின்பாவது பெண்ணையும், மாப்பிள்ளையையும் சேர்த்து ஒரு தடவை மறு வீடு அழைத்துவிட வேண்டுமென்று அவன் தீர்மானித்திருந்தான். ஆனால் மாப்பிள்ளை அவனுடைய அந்தக் குக்கிராமத்துக்கு வர இணங்கவில்லை. தன் பெண் தனக்கு எட்டாத ஊரில் குடித்தனம் நடத்துகிறாள் என்று நினைக்கும்போது அவனுக்கு வேதனையாக இருந்தது. முன்பு சோற்றுக்கும், துணிக்கும், படிப்புக்கும், பேணுதலுக்குமாகப் பாளையங்கோட்டையில் இருந்தாள். இப்போது கணவனோடு கணவன் வீட்டில் இருக்கிறாள். சூசையைப் பொறுத்தமட்டில் இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

எப்படியானால் என்ன? எங்கே இருந்தால் என்ன? ரோஸி அவனுடைய பெண். அந்த ஒரே பெருமையோடு அந்தக் கடற்கரை யேராத்துப் பட்டிக் காட்டில் உயிரை வைத்துக் கொண்டிருந்தான் அவன்.

சூசைசகரியாஸ் பாதிரியாரிடம் அடிக்கொருதரம் தன் மகளை ஊருக்கு 'மறுவீடு' அழைக்க வேண்டுமென்று உருக்கமாக வேண்டிக்கொள்வான். சகரியாஸ் பாதிரியார் அந்தப் பட்டிக்காட்டு மீனவனின் பேதைமை மிக்க பாச உணர்வைக் கண்டு தமக்குள் சிரித்துக் கொள்வார்.

ஒருமுறை ரோஸி ஊர் போவது பற்றி தன் கணவனிடம் பிரஸ்தாபித்தாள். சூசையின்மாப்பிள்ளைக்கோ கிழவனைக் கண்டாலே அருவருப்பு.

“இந்தச் செம்படவக் கிழவனுக்காக உன்னை நான் கலியாணம் செய்து கொள்ளவில்லை, ரோஸி! ஏதோ சகரியாஸ் பாதிரியார் எனக்கு வேண்டியவர் என்பதற்காக இது நடந்தது. அடிக்கடி அந்தக் கிழவனை இங்கே வந்து ஊருக்குக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யச் சொல்லாதே. அவன் இங்கே வந்து போவதே எனக்கு அவமானமாக இருக்கிறது. பாளையங்கோட்டையில் தெரு பெருக்குகிற தோட்டிகூட அந்தக் கிழவனை விட நன்றாகச் சுத்தமாக உடை உடுத்திக் கொண்டிருப்பான்” என்று ரோஸிக்கு அந்த வார்த்தைகளைக் கேட்டபோது தாங்க முடியாத வருத்தந்தான் ஏற்பட்டது. வருந்தி என்ன செய்வது? அதற்காகக் கணவனைப் பகைத்துக் கொள்ள முடியுமா? ஊர் போவதைப் பற்றியும், தந்தையைப் பற்றியும், அன்றிலிருந்து தன் கணவனிடம் பேச்சு எடுப்பதையே விட்டுவிட்டாள் ரோஸி.

அவள் வயிறும், மாதமுமாகப் பேறு காலத்திற்குத் தயாரானாள். கடிதம் எழுத வேண்டிய முறைக்காகத் தந்தைக்கு ஒரு வரி எழுதிக் கணவனுக்குத் தெரியாமல் அதை தபாலில் சேர்த்தாள். சூசைக்கு வருகிற கடிதத்தையெல்லாம் சகரியாஸ் பாதிரியார்தான் அவனுக்குப் படித்துக் காண்பிப்பார். ரோஸியின் கடிதத்தையும் அவர்தான் படித்துக் காண்பித்தார். சூசைக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே.

"ஐயா! இப்போதே புறப்படுங்கள். பாளையங்கோட்டைக்கு இரண்டு பேருமாகப் போவோம். நீங்களும் கூட வந்தால் மாப்பிள்ளை ரோஸியை அனுப்ப மறுக்க