பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / கடல் கறுப்பா? நீலமா? 265

மாட்டார். கட்டாயம் பேறு காலத்துக்கு அவளைப் பிறந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து விடவேண்டும்." அவன் பாதிரியாரைக் கெஞ்சினான். ரோஸியின் கணவனுடைய இயல்பை நன்கு அறிந்திருந்தார் சகரியாஸ் பாதிரியார். ஆனால் அதைச் சூசையிடம் சொல்லிக் கள்ளங் கபடமற்ற அவன் மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை அவர்.

"சூசை நன்றாக யோசித்துப் பார். இந்தப் பட்டிக் காட்டில் உன் பெண்ணைப் பேறு காலத்துக்குக் கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்வதால் என்ன நன்மை? ஒரு மருந்தா? ஒரு டாக்டரா? உன் வீட்டில் உன்னைத் தவிர ஒத்தாசைக்கு வேறு பெண் பிள்ளைகூடக் கிடையாதே பேசாமல் பாளையங்கோட்டையிலே இருந்து விட்டுப் போகட்டும். குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தபின் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து ஒருதரம் எல்லாருமே குடும்பத்தோடு இங்கு வந்துவிட்டுப் போக ஏற்பாடு செய்கின்றேன்."

சகரியாஸ் பாதிரியார் சமாதானப்படுத்தினார். சூசை திருப்தியோடு அதை ஒப்புக் கொண்டான்.

மறுமுறை பாளையங்கோட்டைக்குப் போனபோது சகரியாஸ் பாதிரியார் ரோஸியின் கணவனைச் சந்தித்து'தம்பி விசுவாசம்.அந்தப் பக்கம் வா. நான் இருக்கிற பக்கமெல்லாம் நீ வந்து பார்க்க வேண்டாமா? அழகிய கடற்கரையோரத்துப் பிரதேசம். அது குளச்சல் துறைமுகம், உப்பளம் மணவாளக் குறிச்சியில் ணேமணல் தோரியம் உலோகத் தொழிற்சாலை இதெல்லாம் நீ அவசியம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் அப்பா.அந்தக் கிழவன் சூசைக்காக வராவிட்டாலும் எனக்காகவாவது ஒரு முறை குடும்பத்தோடு வா" என்று அழைத்தார். அவ்னும் ஒரு மாதிரி வர ஒப்புக் கொண்டான். குழந்தை பிறந்ததும் கடிதம் போடுமாறு சொல்லிவிட்டுத் திரும்பினார் பாதிரியார்.

பத்துப் பன்னிரண்டு நாட்கள் கழிந்தன. பாளையங்கோட்டையிலிருந்து கடிதம் வரவில்லை; தந்தி பறந்து கொண்டு வந்தது. சகரியாஸ் பாதிரியார் தந்தியை வாங்கிப் படித்தார். கண்களை மூடித்தியானித்துச் சிலுவையை நெற்றிவரை கொண்டு போனார். அந்தச் செய்தியைச் சூசையிடம் எப்படிச் சொல்வதென்று தயங்கினார். அவன் ஏற்கனவே நொந்து போய்க் கிடக்கிறான்.

"ரோஸி இறந்துவிட்டாள்.ஆண் குழந்தை பிறந்து சுகமாக இருக்கிறது. இதுதான் தந்தியின் வாசகம். நீண்ட ஆறுதலுரைக்குப் பின் சர்ச்சுக்கு அழைத்துப் போய்ப் பிரார்த்தனையையும் முடித்துக் கொண்டு அவனிடம் தந்தியை விளக்கினார். கிழவன் தலையிலடித்துக் கொண்டு கதறியழுதான். அவனைத் தேற்றிப் பாளையங் கோட்டைக்கு அழைத்துக் கொண்டு வந்தார் பாதிரியார். அவர்கள் வருவதற்கும் முன்பே ரோஸியின் சவ அடக்கம் முடிந்துவிட்டது.

தான் மறுபடியும் வேறு திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சகரியாஸ் பாதிரியாரிடம் வெளிப்படையாகவே கூறி விட்டான் மாப்பிள்ளைப் பையன்.