908
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
“ஏலே மூதி! உன்னெயத்தாண்டா கேக்குதேன். இந்தப் பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸிலே பொட்டணம் மடிக்கிறதுக்கு முன்னாலே முந்திரிப் பருப்புக் கசக்குமா இனிக்குமான்னு கூடத் தெரியாதேடா உனக்கு... களவாணிப் பயலே…? முந்திரிப் பருப்பா கேட்குது உனக்கு? முந்திரிப் பருப்புத் திங்கிற முகரையைப் பாரு… திருடித் தின்ன வெட்கமாயில்லை…?
- என்று பொட்டணம் கட்டும் போது கைக்கு இசைவாக இருந்த காரணத்தால், இரண்டு பருப்பை வாயில் போட்டு மென்று விட்ட சிறுவனைத் தாக்கு தாக்கென்று தாக்கித் தள்ளி விடுவார்.
“நாக்கு நீளக் கூடாதுடா! பயலே பொது எடத்துலே இருக்கறவன்... தோணினபடி திருடித் திங்கிறதுன்னு வந்துப்புட்டா, அப்புறம் உலகத்திலேயே நியாயம், தர்மம், ஒண்ணும் இல்லாமல் போயிடும்டா…?”
என்று அந்த முந்திரிப் பருப்புக் குற்றத்துக்கே ஒரு ‘இண்டர்நேஷனல் கிரைம் வியூ’வைக் கொடுத்துப் பெரிதுபடுத்திப் பேசுவார் விநாயகம்பிள்ளை.
“சரிதான் விட்டுத் தள்ளுங்க. ரெண்டு முந்திரிப் பருப்புக்கு ஏன் இப்படித் தொண்டைத் தண்ணி வத்துதிய…? சின்னஞ்சிறுசுக அப்பிடித்தான் இருக்கும்.தெரிந்தும் தெரியாமலும் இருந்திடணும்” என்று கடைக்குச் சாமான் வாங்க வந்த முதியவர்கள் யாராவது மத்தியஸ்தம் செய்ய வந்தால், விநாயகம்பிள்ளை அவர்களாலே அந்த மத்தியஸ்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
“நீங்கசும்மா இரியுங்க...இது வியாபார விவகாரம். நாணயமில்லாட்டி வியாபாரம் குட்டிச் சுவருதான். இன்னிக்கு ரெண்டு முந்திரிப் பருப்புலே நீளற கை, நாளைக்குக் கல்லாப் பெட்டிவரை நீளும்... இதெல்லாம் அப்பப்போ ஒட்ட நறுக்கி எறிஞ்சிடணும்...” என்று மத்தியஸ்தத்துக்கு வந்தவர்களிடம் எறிந்து விழுவார் விநாயகம்பிள்ளை.
தன் வாழ்க்கையில் நடந்த இரண்டே இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்களை எப்போதாவது கதையைப் போல் இரசமாக அனுபவித்துச் சொல்வார் விநாயகம்பிள்ளை. -
அதில் ஒன்று அவர் உழவு மாடு பிடித்துக் கொண்டு வருவதற்காகச் சங்கரன் கோயில் மாட்டுத் தாவணிக்குச் சென்று விட்டுத் திரும்பிய போது இராத்திரி வேளையில், வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை மறித்துக் கொள்ளையடிக்க முயன்று முடியாமல் தோற்று ஓடிப் போன சம்பவமாயிருக்கும்.
மற்றொன்று பழைய காலத்து இராச கம்பீரத்தோடு கூடிய மைசூர் தசராவுக்கு அவர் போய்விட்டு வந்ததைப் பற்றிய வருணனையாக இருக்கும். ஆனால், அதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. மைசூர் தசராவோ, மகாராஜாவோ அந்த வருணனையில் முக்கியமாயிருக்க மாட்டார்கள். திருவாளர் விநாயகம்பிள்ளை அந்த யாத்திரையை வருணிக்கும்போது அவரே மைசூர் மகாராஜாவாயிருப்பார்.