பக்கம்:பச்சையம்மாள் கதை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோயாளிகளுக்குச் சிகிச்சா உபசாரம் செய்த

பச்சையம்மாள் கதை.


புரட்டாசி மாதத்தில் ஒருநாட் காலையில் மப்பு மந்தாரமின்றி இளவெயில் உதிக்க, கடற்காற்று உலாவ, சாலைகள் வீதிகளில் போவார் வருவாருக்கு இவையாவும் இன்பமாயிருந்தன. நகரவாசிகளுக்கு இந்தச் சுகத்துடன் சோலைகள் தோப்புகள் மலிந்தநாட்டில் உலாவும் சுத்தமான காற்று நலமும் இருக்குமானால் ஒன்றால் ஒன்றும் குறை இல்லை யென்று சொல்லத் தகும். சென்னப்பட்டணத்துத் தங்கசாலை வீதியில் நான் அன்று காலையில் இஷ்டர் ஒருவரைக் காணப்போனேன். போகும் போது அவ்வீதியினின்று பிரியும் முடுக்குத் தெரு ஒன்றில் ஒரு மனுஷி திரும்பினாள். அது பகலில் முப்பது நாழிகையும், இரவில் பன்னிரண்டு நாழிகை வரையிலும் ஓயாமல் ஜனம் அடர்ந்து செல்லும் தெரு. அந்த மனுஷி விலை உயர்ந்த ஆடை ஆபரணமுதலிய ஆடம்பரங்களில் விருப்பமுள்ளவளாகத்தோன்ற வில்லை. அவள் கஜம், மூன்று அணா விலை தாளும் சீமைத்-