பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/59

இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

இதைச் சொன்னபோது, பாதிப்பேர், என் வார்த்தைகுக் இணங்கினர். மற்றும் சிலர் 'வியாபாரம் என்றால் லாபம் நஷ்டம் இரண்டும்தான் இருக்கும். இதற்கெல்லாம் நாம் பாத்தியப்பட முடியுமா?' என்று கட்சி பேசினார்கள். பணத்திற்கு மட்டும் வாயைத் திறக்கிற அவர்களுடைய பேச்சு என் மனத்தைப் புண்படுத்தியது. ஆயினும் நான் அவர்களிடம் வாதாட விரும்பவில்லை. மனமுடைந்து இங்கிருக்கப் பிடிக்காமல்தான், லீவ் போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். ஆனால், ஏனோ தெரியவில்லை, நேற்றிரவு இவர்கள் எல்லாரும் கிராமத்திற்கு என் வீடு தேடி வந்துவிட்டனர். அதுமட்டுமல்ல; நான் முன்பு கூறியதற்கு இணங்கி, இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு என்னை, இங்கு அழைத்து வந்துவிட்டனர்" என்று கூறி முடித்தான்.

இதைக் கேட்டதும் முதலாளியின்கண்கள் உணர்ச்சிப் பெருக்கால், அன்பின் மிகுதியால், பளபளத்தன. 'அவசரப்பட்டு, வாசுவை எவ்வளவு தவறாக எடைபோட்டு விட்டேன்' என்று வருந்தியவர், மறுகணம் கையிலிருந்த கடிதத்தைத் தாறுமாறாகக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டார்.

---ஆம்! அந்த ஏழைத் தொழிலாளருடைய பெருந்தன்மையைவிட அவரது கௌரவம் சிறுத்தா போய் விட்டது? 'ஆலமரத்திற்கு ஒரு கிளை முரியலாம்-பாதகமில்லை. ஆனால், தென்னைக்கு இந்தக் கதி நேரலாமா? இத்தனை அருமை தெரிந்த நம்முடைய தொழிலாளருடைய மகிழ்ச்சிக்குப் பயன்படாத பெரும் சொத்து இருந்து என்ன பயன்?'--- இப்படி எண்ணியபடியே எழுந்த பசுபதி, வாசுவின் முதுகைத் தட்டி, "நீதான் பெரும் தவறு செய்துவிட்டாய்" என்று சிரித்தபடியே கூறினார். வாசு ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித் தான்.