பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

புறநானூற்றுச் சிறு கதைகள்


இதன்பின் அவையில் நெடுநேரம் அமைதி நிலவியது. யாரும் எதுவும் பதிலுக்குப் பேசவில்லை.

முடிவாகத் தனக்குள் உறுதி செய்துகொண்ட பாண்டியன் தன்னுடைய முடிவை ஒரு பிரதிக்ஞையாக அந்த அவையில் வெளியிட்டான்.

உறுதி நிறைந்த அந்தப் பிரதிக்ஞை அந்த அவையைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் திகைக்கச் செய்தது."இவருடைய பருவம் எவ்வளவு இளையதோ அவ்வளவிற்கு முதிர்ந்ததாகவும் அழுத்த மாகவும் இருக்கிறதே இந்தப் பிரதிக்ஞை!” என்று அவர்கள் எண்ணினர். “புலிக்குப் பிறந்தது பூனையாகிவிடுமா? எவ்வளவு தான் இளைஞராக இருந்தாலும் பாண்டிய மரபில் வந்தவர் அல்லவா?” என்று இப்படிச் சிலர் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர். அவையிலுள்ளோர் இப்படியெல்லாம் உரையாடுவதற்குக் காரணமாக இருந்த அந்தப் பிரதிக்ஞை தமிழ்நாட்டு இலக்கிய வரலாற்றில் மிகப் பிரசித்தமாக விளங்குகிறது. என்றென்றும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய புகழைப் பரப்பிக் கொண்டிருப்பதற்கு இந்த ஒரு பிரதிக்ஞையே போதுமானது.

பழந்தமிழில் இம்மாதிரிச் சபதங்கள், பிரதிக்ஞைகள் ஆகியவற்றை ‘வஞ்சினம்’ என்ற பெயரினால் குறிப்பிடுவார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினம் அவன் வாய்மொழியாகவே பாடப்பட்ட ஒரு பாடலாகப் புறநானூற்றில் திகழ்கிறது. அவன் ‘மாபெரும் வீரன்’ என்பதை நிரூபிக்கும் அந்த வஞ்சினப் பாடலைப் பொழிப்புரையாக்கிப் பார்ப்போம்.

“இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால் சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப் படைகளையும் தேர்ப்படைகளையும் குதிரைப்படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு திரட்டிக் கொண்டு வந்திருக்