பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

புறநானூற்றுச் சிறு கதைகள்


கொண்டிருப்பதையும் கண்டாள். அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

கோழிகளும் இதல்களுமாக அவள் உலர்த்தியிருந்த தினையில் பெரும் பகுதியை உண்டுவிட்டன; இன்னும் உண்டு கொண்டிருந்தன.

சட்டென்று கையைத் தட்டி ஓசை உண்டாக்கிப் பறவைகளை ஒட்ட எண்ணினாள் அவள். பெரிய ஓசையை உண்டாக்குவதற்காகக் கைகளை வேகமாக ஓங்கினாள். கண்ணிமைக்கும் நேரத்தில் வேறோர் எண்ணம் வந்ததால் ஓங்கிய கை தயங்கியது. அவள் மனத்தில் மின்னலைப் போலக் குறுக்கிட்ட அந்த எண்ணம் என்ன? ஓங்கிய கைகளைத் தடை செய்த அந்த உணர்வுதான் யாது?

அவளுக்கு வலப் பக்கமும் இடப் பக்கமுமாக அமைதி ஒன்றிலேயே நிகழ முடிந்த இரண்டு காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் கைகள் ஓசையை உண்டாக்குமானால் அந்த இரு காரியங்களும் குலைந்து போவது உறுதி. அந்த இரண்டு செயல்களும் குலைந்து போவதை அவள் விரும்பவில்லை. வலப் பக்கம் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆண் மானும், பெண் மானும் ஒன்றையொன்று நெருங்கிச் சொல்லித் தெரியாத கலையைக் கேளிக்கை மூலம் தெரியவைத்துக் கொண்டிருந்தன. அன்பு என்ற உணர்வு காதலாகிக் காதல் என்ற உணர்வு இன்பமாகி உடலும் உள்ளமும் சங்கம முற்றிருக்கும் ஒரு நிலை.

இடப் பக்கம் கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான். விழித்திருக்கும்போது ஒரு சில அம்புகளைக் கொண்டே யானையைக்கூட வேட்டையாடிவிடும் அவ்வளவு வலிமை அந்த உடம்பிற்கு உண்டு. உறங்கிவிட்டாலோ தன்னை மறந்த உறக்கம்தான்.

ஓங்கிய கை நின்றது! வெளியே உலர்த்தியிருந்த தினை முழுவதையும் கோழி தின்றுவிட்டாலும் அவளுக்குக் கவலை