பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

119


ஏதாவது பரிசிலைக் கொடுத்து அவரை அனுப்பும்படி ஏற்பாடு செய்து விடுகிறேனே...” அலட்சியம் தொனிக்கிற குரலிலேயே இளவெளிமான் பதில் கூறினான்.

“தம்பீ! நீ என்ன பேசுகிறாய், யாரிடம் பேசுகிறாய் என்பதைச் சிந்தித்து நிதானமாகப் பேசு! நீ என் உடன்பிறந்தவன் என்பதற்காக உன்னை விடுகின்றேன். இதே சொற்களை வேறொருவன் பேசியிருந்தால் அவனுடைய நாக்கு இந்த விநாடி என் கத்தி முனையிலிருந்திருக்கும்” வெளிமானின் குரலில் கேட்பவர்களை நடுங்க வைக்கும் கடுமை ஒலித்தது.

“சரி அண்ணா கோபப்படாதீர்கள். நான் போகிறேன்” என்று கூறிவிட்டு வேண்டாவெறுப்பாகப் புலவரைக் கண்டு வரவேற்பதற்காகச் சென்றான் இளவெளிமான். எப்படியும் தன் தம்பி புலவரைச் சந்தித்து அவருக்கு வேண்டியவற்றைச் செய்வான் என்ற நம்பிக்கையோடு வெளிமான் தன்னை மறந்த உறக்கத்தில் இலயித்துப் போனான்.

ஆனால், நடந்தது முற்றிலும் வேறுபட்ட நிகழ்ச்சி. இளவெளிமான் புலவரை அன்போடு வரவேற்கவில்லை."என்ன காரியமாக ஐயா வந்தீர்கள்” என்று அன்போடு விசாரிக்கவில்லை. பெருஞ்சித்திரனாரிடம் சென்று அவர் தகுதியை உணராமல் இரண்டு மூன்று பொற்கழஞ்சுகளைப் பிச்சைக்காரனுக்கு வீசி எறிகிறாற்போல வீசி எறிந்துவிட்டு, “ஒய் புலவரே, பேசாமல் இதை எடுத்துக்கொண்டு போய்விடும். இப்போது நீர் என் அண்ணனைப் பார்க்க முடியாது. அவன் தூங்குகிறான். இன்னொரு சமயம் வந்து பாரும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்றுவிட்டான். தன்னுடைய பண்பற்ற செயல் புலவரை எவ்வளவு தூரம் மனம் புண்பட்டு வருந்தச் செய்திருக்கும் என்பதை அவன் நினைத்துப் பார்க்கவே இல்லை. பெருஞ்சித்திரனாரோ தமக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இளவெளிமான் ಸ್ತ್ರ பொற்கழஞ்சுகளை எடுத்துக்கொள்ளாமல் அமைதிய்ாக வந்த வழியே ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.