பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

133


சந்திரனும் விட்டு வாசலிலும் பலகணியிலும் மலர்கிறதாவது?’ என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆம் தாமரை மலரைப் போலவும் முழு மதியைப்போலவும் முகங்களை உடைய கன்னிப் பெண்கள் பலர் பொகுட் டெழினியைக் காண்பதற்காகத் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். எழினியின் அழகைப் பார்க்க அவ்வளவு ஆர்வம். அதை வெறும் ஆர்வமென்றுகூடச் சொல்வதற்கு இல்லை. ‘ஆர்வவெறி’ என்றே சொல்லலாம்.

காதற் கடவுளாகிய மன்மதனே தேரில் ஏறி வீதியில் செல்வதாகத் தோன்றும் அவர்களுக்கு. ஒரே நாளில், ஒரே சமயத்தில், ஒரே பார்வையில் கண்டு, கண்களையும் மனத்தையும் திருப்திபடுத்திக்கொண்டுவிடக்கூடிய அழகு அன்று அது. இவன் தேரேறி வீதியில் போகின்றபோதெல்லாம் வீதியில் இவனைப் பார்த்தாலும் இவன் புதிய அழகனாகவே தெரிகிறான். இரஸத் தேர்ச்சியும் காவிய ஞானமும் உள்ள மகாகவி ஒருவன் சிருஷ்டித்த காவியம் எத்தனை தடவை படித்தாலும் புதிய அழகும் புதிய நயமும் உடையதாகவே தோன்றுகிறது பாருங்கள்!

பொகுட்டெழினியின் இளமை அழகும் அவ்வூர்க் கன்னிப் பெண்களுக்கு இப்படி ஒரு காவியமாகத்தான் இருந்தது. எனவே அழகைக் காண்பதில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குன்றவில்லை.

தெருவில் இவன் செல்லுகிற போதுகளிலே வழக்கமாக நடக்கும் இந்த மறைமுகமான ‘தரிசன நாடகத்’தை ஒளவையார் ஒருநாள் பார்த்துவிட்டார். ‘பொகுட்டெழினியின் அழகு இளம் பெண்களை என்ன பாடுபடுத்துகிறது?’ என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘தன் ஆருயிர் நண்பனாகிய அதியமானின் புதல்வன்தான் இந்த அழகன்’ என்ற எண்ணத்தினால் அவருக்குப்பெருமிதம் ஏற்பட்டாலும்,மற்றோர் பக்கம் இது பெரிய ஆச்சரியமாகவே தோன்றியது.

‘மனித நியதிக்கு மேற்பட்ட அழகு ஆணுக்கோ, பெண்ணுக்கோ இருந்தால் அதன் விளைவு மகா விரலமாக இருக்கும் என்பதை அறிந்தவர் அவர்.