பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




34. முன்னோர் தவறு

ஒருசமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், கடையேழு வள்ளல்களின் மரபினராகிய சிற்றரசர்கள் இருவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சிற்றரசர்களில் ஒருவனின் பெயர் இளவிச்சிக்கோ, மற்றொருவன் பெயர் இளங்கண்டீரக்கோ முன்னவன் சற்றே வயது முதிர்ந்தவன். பின்னவன் பருவத்தில் மிக இளைஞன். புலவருடைய முதுமையை வைத்துக் கொண்டு பார்த்தாலோ இருவருமே அவரது நோக்கிற்கு இளைஞர்கள்தாம்.

அவர்கள் இருவரையும் புலவர் நன்கு அறிவார். புலவரையும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு சிற்றரசர்களையும் சந்தித்தபோது இளங்கண்டீரக்கோவை மட்டும் வணங்கி அன்போடு தழுவிக்கொண்ட பெருந்தலைச்சாத்தனார், இளவிச்சிக்கோ நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவனைத் தம் கண்களால் நோக்குவதற்கே விருப்பமில்லாதவர் போலக் காணப்பட்டார் அவர்.

புலவர் தன்னைக் கவனிக்காது பாராமுகமாக இருப்பதைக் கண்டுகொண்ட இளவிச்சிக்கோ, தானாகவே வலுவில் அவருக்கு முன்வந்து நின்று, “புலவர் பெருமானே! தங்கள் அன்பன் இளவிச்சிக்கோ வணங்குகிறேன்” என்று கூறி அவரை வணங்கினான். ஆனால் இளவிச்சிக்கோவின் சொற்களைக் கேட்டும் அவன் தம்மை வணங்குவதை ஒரு பொருட்டாக மதிக்காமலே தலைகுனிந்து வீற்றிருந்து விட்டார் புலவர்.

‘ஒருகால் தான் கூறியதும் வணங்கியதும் புலவர் செவிகளில் விழாமல் இருந்திருக்கலாம்! தற்செயலாக அவர் தலைகுனிந்து கொண்டு விட்டார் போலும் என்று எண்ணிய இளவிச்சிக்கோ, இரைந்த குரலில், “ஐயா, தங்களைத்தான்! அடியேன் இளவிச்சிக்கோ வணங்குகின்றேன். ஆசீர்வதியுங்கள்” என்று மீண்டும் அவர் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பாதங்களைப் பற்றினான். ஆனால் புலவரோ, தீயை மிதித்து விட்டவர்போல நடுங்கித் தம் காலை அவன் கைகளிலிருந்து