பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

151

உதறிக்கொண்டு முகத்தில் வெறுப்பின் சாயை அழுத்தமாகப் படர ஒதுங்கி நின்று கொண்டார். அவர் வேண்டுமென்றே தன்னை அவமதிக்கின்றார் என்ற செய்தி இளவிச்சிக்கோவுக்கு அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது. இளவிச்சிக்கோ திடுக்கிட் டான்.அந்த ஒரே ஒரு கணத்தில் ஆத்திரம், ஏமாற்றம், அவமதிப்பு, அத்தனை உணர்ச்சிகளும் மின்னல் வேகத்தில் அவன் மனத்தைத் தாக்கின. உள்ளம் புலவர்மேல் சீறியது. உடலோ, அவமானம் தாங்கமுடியாமல் கூசிக் குறுகியது.

அருகிலிருந்த இளங்கண்டீரக்கோவுக்கும் புலவருடைய இந்தச் செயல் புதிர்போலவே இருந்து வந்தது. அவர் ஏன் இளவிச்சிக்கோவினிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொள் கிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாமல் அவன் திகைத்தான். “தான் வணங்கியதை மட்டும் ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் செலுத்தி அன்போடு தழுவிக் கொண்டாரே! அவ்வாறிருக்க விச்சிக்கோவை வெறுப்பதன் காரணம்? . இளங்கண்டீரக்கோவின் சந்தேகம் வலுவடைந்தது.

அவன் துணிவை வரவழைத்துக் கொண்டு புலவரையே நேருக்கு நேர் கேட்டுவிட்டான்.

“ஐயா! நானும் இளவிச்சிக்கோவும் ஒரே தகுதி யுடையவர்கள்தாம். தாங்கள் என்னை மட்டும் வரவேற்று அன்போது தழுவிக் கொண்டிர்கள். அவனை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டேன் என்கிறீர்கள் இதன் காரணம் எனக்கு விளங்கவில்லையே?”

தான் கேட்கவேண்டிய வினாவையே தன் சார்பில் கண்டீரக்கோ கேட்டுவிட்டதனால் புலவர் கூறப்போகும் பதிலை ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கொண்டு நின்றான் விச்சிக்கோ

“நான் இவனை வெறுப்பதற்குத்தகுந்த காரணம் இருக்கிறது. கண்டீரக்கோ! அது சாதாரணமாக நர்லைந்து வார்த்தைகளில் சொல்லி முடித்துவிடக்கூடிய காரணமில்லை. அதனுள் ஒரு பெரிய சோகக் கதையே அடங்கியிருக்கிறது.”