பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

157


பாய்ந்தது.அம்புக் கூட்டிலிருந்து சிதறிய அம்புகளில் இரண்டைக் கையில் எடுத்துக்கொண்டு அது தன்மேல் பாய்ந்த வேகத்தில் அதன் நெஞ்சில் ஊடுருவும்படியாகக் குத்தினான். மறுபடியும் தரையில் ஓங்கி ஒர் அடி புலி ஈனஸ்வரத்தில் அலறிக்கொண்டே தரையில் விழுந்தது. சிறிதுநேரத்தில் துடிதுடித்துச் செத்தும் போயிற்று.

முனிவர் ஆவலோடு எழுந்திருந்து ஓடிவந்து அவனைத் தழுவிக் கொண்டார். பாராட்டி நன்றி செலுத்தினார். அவன் வீரத்தை வாய் ஓயாமல் புகழ்ந்தார்.அவர் பெயர் தபங்க முனிவர்” என்பதென்றும் அந்த வனத்தில் வெகு நாட்களாகத் தவம் செய்து கொண்டு வருகிறாரென்றும் இருங்கோவேள் அறிந்து கொண்டான். தன்னைப் பற்றியும் அவருக்குக் கூறினான்.

“இருங்கோவேள்! இந்த வீரச் செயலின் நினைவுச் சின்னமாக உனக்கு ஒரு சிறப்புப் பெயர் தருகிறேன். அன்புடன் மறுக்காமல் ஏற்றுக்கொள்...”

“தங்கள் திருவாயால் சிறப்புப் பெயர் பெற என் நல்வினை இடங்கொடுத்தால் அது எனக்குப் பெரும்பாக்கியம் முனிவரே”

“புலிகடிமால் - என்ற சிறப்புப் பெயரை என் நன்றிக்கு அறிகுறியாக உனக்குச் சூட்டுகிறேன்.”

“முனிவரே! என் வீரத்தைப் பாராட்டுகிறீர்களே ஒழிய, என்னோடு சாமர்த்தியமாகப் போரிட்ட புலியின் வீரத்தைப் பாராட்ட மாட்டேன் என்கிறீர்களே”

“அப்பா இருங்கோவேள்! அது வெறும் புலிதான். நீயோ வீரப் புலி”.

இருங்கோவேள் முனிவரை வணங்கினான். முனிவர் அவனுக்கு ஆசி கூறி விடைகொடுத்தார்.

வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு