பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

165

கொண்டிருந்தான். பரந்த மார்பின் அழகை அது எடுத்துக் காட்டியது.அவனைப் பார்த்தால் யாரோ ஒரு சிற்றரசன் என்றோ, செல்வச் சீமான் என்றோ மதிக்கலாமே தவிர, கேவலம் வேட்டையைத் தொழிலாகக் கொண்டவன் என்று சொல்ல முடியாது. வன்பரணர் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார். சற்றேனும் பயமின்றி யானையைப் பின்பற்றி விரட்டிக் கொண்டிருந்தான் அவன்.

ஆனால் அடுத்த நொடியில் வேறு ஒரு பயங்கரமும் அவனெதிரே வந்து வாய்த்தது. அவனால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த யானைக்கு முன் ஒரு பெரிய வேங்கைப் புலி மகா கோரமாக உறுமிக் கொண்டே பாய்ந்தது. அந்த வீரன் வில்லை வளைத்தான். கூரிய எஃகு அம்பு ஒன்று அவன் வில்லிலிருந்து. “கிர் ரென்று பாய்ந்தது. என்ன வேடிக்கை? அந்த அம்பு யானையை ஊடுருவிப் புலியையும் ஊடுருவி இரண்டையும் கீழே வீழ்த்திவிட்டுப் புதரில் பதுங்கியிருந்த ஒரு புள்ளி மானைக் கீழே உருட்டித்தள்ளி அருகே மயிரைச்சிலிர்த்துக் கொண்டுநின்ற ஒரு முள்ளம் பன்றியைக் கிழித்துவிட்டு மரத்தடியில் புற்றின்மேல் கிடந்த உடும்பின் மேல்போய்த் தைத்தது.

‘என்ன வினோதம்? ஒரே ஒர் அம்பு! ஐந்து உடல்களை ஊடுருவி விட்டதே! வில் பயிற்சியிலேயே இது ஒரு சாமர்த்தியமான அம்சம். இதற்குத்தான் வல்வில் என்று பெயர் சொல்லுகிறார்கள் போலும்!’ வன்பரணர் ஆச்சரியத்தோடு சிந்தித்தார்.

அப்படியே அவனருகில்போய் அவனைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது அவருக்கு அங்கிருந்த பாணர் களையும் விறலியர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார். அவன் வேட்டையாடி வீழ்த்திய மிருகங்களைப் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான்.ஒரே அம்பினால் ஊடுருவிக் கொல்லப்பட்ட யானை, புலி, மான், பன்றி, உடும்பு எல்லாம் அடுத்து அடுத்து வரிசையாக இரத்தம் ஒழுகிட வீழ்ந்து கிடந்தன.