பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

புறநானூற்றுச் சிறு கதைகள்


“இது என்ன அதியா? நெல்லிக் கனியா?” - “ஆமாம் தாயே!” ஒளவையார் வாங்கிக் கொண்டார்.

“இது மாதிரி நெல்லிக் கனியை நான் இதுவரை கண்டதே. இல்லையே? என்ன கனிவு? என்ன திரட்சி? எவ்வளவு அருமையான நெல்லிக்கனி இது? இதை எங்கிருந்து கொண்டு வந்தாய் நீ”

“முதலில் இதைச்சாப்பிடுங்கள்தாயே! மற்றவற்றை எல்லாம் பின்பு கூறுகின்றேன்.” ஒளவையார் நெல்லிக்கனியை எடுத்து உண்டார். உண்ணும் போதே அதன் சுவையை வியந்தார். அதியமான் அந்த நெல்லிக்கனி தனக்குக் கிடைத்த விவரத்தைக் கூறினான்.அதோடு அந்தக் கனியின் பயனையும் கூறினான்.

“அதியா! உண்டாரை நீண்டநாள் வாழ வைக்கும் இந்தக் கனியை, நீ அல்லவா உண்டிருக்க வேண்டும்? எனக்கு ஏன் கொடுத்தாய்? சாகின்ற வயதை எட்டிக் கொண்டிருக்கும் கிழவி நான்! முன்பே சொல்லியிருந்தால் இதை நான் உண்டிருக்க மாட்டேனே!”

“நீங்கள் மறுப்பீர்கள் என்பதற்காகவே அதன் பயனை முதலில் உங்களிடம் நான் கூறவில்லை”

“சிவபெருமான் திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை யெல்லாம் தாம் உண்டுவிட்டு அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தாராம். இந்த அரிய கனியை அடைய முயற்சி களையெல்லாம் நீ செய்துவிட்டு, இப்போது நான் உண்ணுமாறு கொடுத்துவிட்டாயே! சிவபெருமானைப் போல நீ நீடுழி வாழ்க!”

“தாயே! நீங்கள் உண்டால் எத்தனையோ பேரை வாழ்விக்க முடியும்.நான் கேவலம் ஒரு நாட்டைக்காக்கும் காவலாளி. நீங்கள் உலகைக் காக்கும் அறிவுத்தாய். நீங்கள் ஊழி ஊழி காலம்