பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


40. கால் கட்டு

வைகறை கருக்கிருட்டின் மங்கலான ஒளியில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும் குழந்தைகளையும் கண்களில் நீர்மல்க ஒருமுறை பார்த்தார் ஒரேருழவர். பந்தத்தை அறுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவது என்பது எவ்வளவு கடினமான செயல் என்பதை இப்போதுதான் அவரால் உணர முடிந்தது.

வீடு நிறைய மக்களையும் மனைவியையும் வைத்துக் கொண்டு, அவர்கள் வயிறு நிறைய வழி சொல்லத் தெரியாமல் திண்டாடுகிற கையாலாகாத் தனத்தைவிட எங்கேயாவது ஒடிப் போய்விட்டால் நல்லதென்று தோன்றியது அவருக்கு பலநாள் எண்ணி எண்ணி இந்த முடிவிற்கு வந்திருந்தார்! இன்று அதைச் செயலாக்கும் அளவுக்கு, விரக்தி மனத்தைக் கல்லாக்கியிருந்தது.

விடிந்தால் மனைவியும் குழந்தைகளும் எழுந்திருந்து விடுவார்கள். அவர்களைப் பார்த்தால் ஒட மனம்வராது. சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட இந்தக் கருக்கிருட்டு நேரத்தைப்போல வசதியானது எதுவுமில்லை. ஏழையின் வாழ்வில், புதிதாக ஒருநாள் பிறக்கிறது என்றால் அது பெரிய வேதனையின் வடிவம். தன் வயிறும் நிரம்பாமல், மனைவி மக்களையும் பட்டினிக் கோலத்திலே கண்டு, நெஞ்சு குமுறி அணுஅனுவாகச் செத்துக் கொண்டிருப்பதைவிட ஒரேயடியாக எங்கேனும் ஒடிப்போய்ச் செத்துத் தொலைப்பது எவ்வளவோ மேல்!

மேல் ஆடையைத் தோளில் உதறிப்போட்டுக் கொண்டு, வாசல் கதவைத் திறந்து வெளியேறினார் அவர். மனத்தை நெகிழவிடாமல் உறுதி செய்துகொண்டு திரும்பிப் பாராமல் நடையை எட்டிப் போட்டு நடந்தார்.

முதலில் மனைவி மக்களின் முகம் மறைந்தது. பின் வீடு மறைந்தது. அடுத்து ஊர் மறைந்தது. ஆண்டுக் கணக்கில் பழகிய