பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

புறநானூற்றுச் சிறு கதைகள்


“ஏன்? உன்னுடைய கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொண்டு உன்னைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் மக்களுக்கு இந்தக் கொடுமையைத் தயங்காமல் செய்து வருகிறார்கள்”.

“உடனே இந்த விஷயத்தைக் கவனிக்கிறேன் பிசிராந் தையாரே! சிறிதும் அஞ்சாமல் என்னை அணுகி இதைக் கூறியதற்கு என் நன்றி. உங்கள் துணிவு போற்றற்குரியது!”

“போற்றுதலை எதிர்பார்த்து உன்னிடம் இதைக் கூற வரவில்லை. உங்களைப் போன்றவர்கள் வழிதவறிவிட்டால், இது வழியல்ல, அதோ அதுதான் வழி என்று சுட்டிக் காட்டுவதற்காகத்தானே புலமையைத் தொழிலாகக் கொண்டு நாங்கள் வாழ்கிறோம்.”

“போற்றுதலை எதிர்பாராத நிலை இந்த உலகாளும் தொழிலைவிட உயர்ந்தது புலவரே! ஏன் தெரியுமா? உலகாள் பவர்களை யார் ஆள முடியும்? புலவர்கள்தாம் மன்னர்களையும் ஆளுபவர்கள்.அவர்கள் வெறும் மனிதர்களில்லை. தெய்வங்கள்.”

“நிறையப் புகழ்ந்து விடாதே நம்பீர்” இருவரும் தமக்குள் சிரித்துக்கொண்டனர். யானைக் கதையை நினைத்துச் சிரித்த சிரிப்புத்தானோ அது?

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும். (புறநானூறு - 184)

காய்நெல் = முதிர்ந்த நெல்கதிர், கவளம் = சோற்று உருண்டை, மா=சிறுநிலப்பரப்பு, செறு = பெரிய நிலப்பரப்பு, தமித்து = தனியே.