பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

புறநானூற்றுச் சிறு கதைகள்


அவர் பாரிக்கு வேண்டியவர் என்பதை எண்ணிப் பாராமுகமாக இருந்துவிடாமல் தமிழ்ப் புலவர் என்ற முறைக்கு மரியாதை கொடுத்து வரவேற்றனர் மூவரும். கபிலர் கீழே முற்றுகையிட்டிருந்த மூவேந்தர்களின் விருந்தினராக அவர் களோடு தங்கினார்.

சிலநாட்கள் கழிந்தபின், ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் வாயிலிருந்து பாரியின் மலை அரண்களைப் பற்றிய இரகசியமான விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றனர் மூவேந்தர். ஆனால் கபிலர் அவர்களுக்குச் சரியானபடி அறிவுரை கூறிவிட்டார்.

“நாங்கள் இவ்வளவு நாட்களாக இங்கே முற்றுகை இட்டிருந்தும் உங்கள் பாரி சிறிதும் கவலையே இல்லாமல் மலைமேல் சுகமாக இருக்கிறானே? எங்கள் முற்றுகை அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையோ?”

கபிலர் பதில் கூறாமல் மூவேந்தர்களையும் பார்த்து மெல்ல சிரித்தார். அவர் தங்களைப் பார்த்ததும் சிரித்தவிதமும் எத்தகைய அர்த்தத்துக்கு உரியன என்பதை மூவேந்தர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. “பாரியைப் பற்றியா கேட்கிறீர்கள்? மிகவும் நல்ல கேள்விதான்! நீங்கள் இத்தனை பலமாகவும் பயங்கரமாகவும் முற்றுகையிட்டிருந்தும்கூடப் பாரி இன்னும் மலைமேல் குறைவின்றி எப்படி வாழ்கிறான்? என்ற விவரம் உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான். ஆனால்...”

“ஆனால் என்ன? சொல்லுங்களேன் புலவரே?”

“அவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதனால் நீங்கள் செய்யப் போவதுதான் என்ன?”

“அது என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள் கபிலரே! நாங்கள் கையாலாகாதவர்கள் அல்லவே? காரியத்தோடுதான் இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம்”