பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

189

“நான் உங்களைத் தாழ்த்திக் கூற வரவில்லை. பாரியைப் பொறுத்தமட்டில் உங்களால் ஏதும் செய்ய முடியாதே’ என்றெண்ணும்போது எனக்கு உங்கள்மேல் மிக்க அனுதாபம் ஏற்படுகிறது.”

“ஏன் முடியாது, கபிலரே? நாங்கள் மூன்று பேர். பாரி ஒரு தனியன். நாங்கள் மூவரும் பேரரசர். பெரும்படைகளோடு வந்திருக்கின்றோம். பாரி சிற்றரசன், வெறுங் குறுநில மன்னன். அவன் படைகளின் தொகை எங்களுக்குத் தெரியும் எங்கள் படைகளில் நூற்றில் ஒரு பங்குகூடத் தேறாது”

“நீங்கள் சொல்வனவெல்லாம் உண்மைதான் மூவேந்தர்களே! ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படைகள் மட்டுமின்றி இன்னும் ஆயிரம் மடங்கு பெரும்படைகளை வேண்டுமானாலும் நீங்கள் கொண்டு வரலாம். பாரியை மாத்திரம் படை பலத்தால் அசைக்கக்கூட முடியாது உங்களால் இது நிச்சயம். மறந்து விடாதீர்கள்.”

“அப்படியானால் பாரியிடம் படைபலத்தால் அசைக்க முடியாத அளவு அப்படி என்னதான் இருக்கிறது?”

“பாரியின் பறம்பு மலையை எளியதாக நினைப்பதனால்தான் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். உங்கள் மூவருடைய முற்றுகை யினாலும் பறம்புமலை சிறிதும் பாதிக்கப்படாது. உழவர் உழாமலே இயற்கையிலேயே நான்கு உணவுப் பொருள்கள் மலைமேல் விளைகின்றன. மூங்கிலரிசி ஒன்று; பலாப்பழம் இரண்டு வள்ளிக்கிழங்கு மூன்று கொம்புத்தேன் நான்கு இந்த நான்கு குறையாத உணவுப் பொருள்களோடு பளிங்கு போலத் தெளிந்த இனிய நீர்ச்சுனைகளுக்கும் பறம்பு மலையில் பஞ்சமே இல்லை. இதனால் மலைமேல் உணவுப் பஞ்சமோ, தண்ணீர்ப் பஞ்சமோ ஏற்பட்டுப் பாரி அவற்றைத் தாங்க இயலாமல் வருந்தி நடுங்கிக் கீழே ஒடி வந்து உங்கள் முற்றுகைக்கு அடிபணிவான் என்று கனவிலும் நினையாதீர்கள். யானைப் படைகளையும் தேர்ப்படைகளையும் மலைமலையாகக் குவித்தாலும் போர்