பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

191

‘உங்களுக்கு என்ன பரிசில்வேண்டும்’ என்று கேட்பான் பாரி. ‘உன் உயிரும் பறம்பு மலையும் எங்களுக்கு வேண்டும்’ என்று நீங்கள் மூவரும் தலைவணங்கிக் குழைவான குரலில் கேளுங்கள். தயங்காமல் இரண்டையும் உடனே உங்களுக்குக் கொடுத்து விடுவான் அவன். நீங்கள் பாரியை வெல்ல இந்த ஒரே ஒருவழிதான் உண்டு. வாளோலோ, போராலோ, முற்றுகை யாலோ நீங்கள் நிச்சயமாக அவனை வெல்ல முடியாது” கபிலர் கூறி முடித்தார். மூவேந்தர் நெஞ்சத்தை அணுஅனுவாகச் சித்திரவதை செய்யும் விஷமத்தனம் நிறைந்த புன்னகை ஒன்று அவர் இதழ்களில் அப்போது நெளிந்தது.

மூவேந்தர்கள் முகத்தில் ஈயாடவில்லை. கபிலர் அவர்களைச் சரியானபடி அவமானப்படுத்திவிட்டார். வெட்கித் தலைகுனியும் படியாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசப்பெற்ற அவர் சொற்கள் அவர்களைக் கூசிக் குறுகிச் சிலைகளாய் வீற்றிருக்கும்படி செய்துவிட்டன.

“பாரி, வாளுக்குமுன் பணியமாட்டான். கலைக்குமுன் பணிவான்.போரில் பகைவர்களுக்குத் தோற்காததன் நாட்டையும் உயிரையும் அரண்மனையில் தனக்குமுன் ஆடிப்பாடும் கலைஞர் களுக்குத் தோற்கத் தயாராயிருப்பான். கலைக்கும் கவிதைக்கும் தலை வணங்கி யாவற்றையும் அளிக்கத் தயாராயிருப்பான். ஆனால் போரால் அவனை அசைக்க முடியாது” முன்னிலும் பலமாக வாய்விட்டுச் சிரித்தார் கபிலர். சிரித்துக்கொண்டே மூவேந்தர்களையும் நோக்கி, “வருகிறேன் மன்னர்களே! நான் மலைமேல் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, வெளியே நடந்தார் அவர்.

தைரியமாகக் கைவீசிச் சிரித்துக்கொண்டே நடந்து செல்லும் அந்தப் புலவரின் உருவத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டேதிக்பிரமை பிடித்துப்போய் வீற்றிருந்தனர் மூவேந்தர்! அவருடைய சிரிப்பொலி அவர்கள் செவிகளை நெருப்பாகச் சுட்டது!