பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29


இதை அவன் கேட்கிறான்?' என்பதும் அவர்களுக்கு விளங்க வில்லை. அவர்கள் திகைத்துப் பேசாமல் இருந்துவிட்டார்கள். நக்கீரரால் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை. அவர் விடை கூறினார்:

“மன்னர் மன்னவா! ஜீவனம் என்ற ஒரே வரிசையில் உலக நூலில் உயிர் முத்துக்கள் பரம்பொருளால் தொடுக்கப் பெற்றிருக்கின்றன. அவைகளில் ஏற்றத்தாழ்வு என்பது காணும் கண்களாலே ஏற்படும் ஒரு வகை மயக்க உணர்வே ஒழிய, உண்மையாக நோக்கினால் வாழ்வின் அடிப்படையில் ஒருமை தான் உலகெங்கும் நிலவுகிறது!”

“புலவர் பெருந்தகையே! உங்கள் விடை எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகின்றது. ஆனால் வாழ்க்கை அடிப்படையின் 'அந்த ஒருமைப் பாட்டை' எனக்கு நீங்களே விளக்கிக் காட்டினிiர்களாயின் நலமாயிருக்கும் என்று எண்ணுகின்றேன்.”

“நல்லது அரசே! என்னால் நிரூபித்துக் காட்டுவதற்கு முடியும். ஆனால் அதற்குத் தாங்கள் என்னுடைய நிபந்தனை ஒன்றையும் அங்கீகரித்துக் கொள்ளவேண்டி நேரிடுகிறது”

“என்ன நிபந்தனை? கூசாமல் கூறுங்கள் நக்கீரரே!”

“இந்த அரியணை, இந்த அரண்மனை, வனப்பு வடிவமான இந்த மதுரை மாநகரம் எல்லாவற்றையும் ஒரே ஒரு நாள் நீங்கள் துறந்து என்னோடு புறப்படவேண்டும் அரசே!”

“நக்கீரரே! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கு நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே? எங்கே புறப்பட வேண்டும் நான்? எதற்காகப் புறப்பட வேண்டும்?”

“பொதியமலைக் காடுகளுக்கு என்னோடு புறப்பட வேண்டும் அரசே! வாழ்க்கையின் அடிப்படை ஒருமையைத் தெரிந்து கொள்வதற்காக”

“வாழ்க்கையின் 'அடிப்படை ஒருமை' என்பது ஏதாவது ஒரு மூலிகையா என்ன, பொதியமலைக்காட்டில் அது கிடைப்பதற்கு?