பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

புறநானூற்றுச் சிறு கதைகள்


புலவர்களும் பொத்தியாரும் கண்டனர். அவர் யார்? அந்த வெயிலில் எங்கே போகின்றார்?’ என்பதை அவர்களால் உய்த்துணரக்கூட முடியவில்லை.

“ஐயா! இங்கே காவேரிக்கரையில் கோப்பொருஞ்சோழன் வடக்கு நோக்கி உண்ணா நோன்பு இருக்கிறானாமே? அது எந்த இடத்தில்? உங்களுக்குத் தெரியுமானால் சொல்லுங்கள். நான் இந்த ஊருக்குப் புதியவன், நீங்கள் சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.”

வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்தவர் பொத்தியாரை நோக்கிக் கேட்டார். பொத்தியார் அந்த மனிதரை மேலும் கீழுமாக ஏற இறங்கப் பார்த்தார். பின்பு மறுமொழி கூறினார். “ஏன்? கோப்பெருஞ் சோழனிடம் உமக்கு என்ன காரியம்? நீர் எங்கிருந்து வருகிறீர்?”

“ஐயா! நான் பாண்டிய நாட்டிலிருந்து வருகிறேன். என் பெயர் பிசிராந்தையார். கோப்பெருஞ் சோழனுக்கு உயிருக் குயிரான நண்பன்.அவனை உடனே பார்க்க வேண்டும்”

பொத்தியாருக்கும் உடனிருந்த புலவர்களுக்கும் பெருந் திகைப்பு ஏற்பட்டது. பொத்தியாருக்கு வந்தவரை மேலும் ஆழம் பார்க்கத் தோன்றியது.

“ஓ! நீங்கள்தாம் பிசிராந்தையாரோ? இப்போது சோழனைக் கண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அவனோடு சேர்ந்து நானும் வடக்கிருந்து என் உயிரைவிடப் போகின்றேன்”

பொத்தியாரும் மற்றவர்களும் அப்படியே பிசிராந்தையாரின் கால்களில் வீழ்ந்து வணங்கினர்."பிசிராந்தையாரே! நட்பு என்ற வார்த்தைக்கே நீர் ஒரு புதிய மதிப்பளித்துவிட்டீர் ஐயா! உம்மால் அந்தப் பதமே ஒரு அமரகாவியமாகிவிட்டது” என்றார் பொத்தியார். உடனேஅவரை அழைத்துச்சென்று சோழனிடம் சேர்த்தார். நட்பின் கதையை விளக்கும் நிகழ்ச்சியாகக் காவிரிக் கரையில் இரண்டு உயிர்கள் ஒன்றாயின.