பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

புறநானூற்றுச் சிறு கதைகள்

“சொல்லுகிறேன்! அந்தப் பெண்ணின் வீரத்தையும், துணிவையும் இப்போது நினைத்தாலும் அந்நினைவைத் தாங்க முடியாது என் நெஞ்சு அழிந்துவிடும் போலிருக்கிறது.”

“வெள்ளை உடையும் திலகமில்லாத நெற்றியும், பூவில்லாத கூந்தலுமாகத் தோன்றுகிறாளே! அப்படியானால்.”

“ஆம், அவள் கணவனை இழந்தவள்தான்.”

“ஐயோ! பாவம். இந்தச் சிறு வயதிலேயா?”

“கணவனை மட்டும் என்ன? குடும்பம் முழுவதையும் இழந்தாள் என்று கேட்டிர்களானால் இன்னும் வியப்பு அடைவீர்கள்.”

“சொல்லுங்கள்! புனிதவதியாகத் தோன்றுகிற இவள் வரலாறு முழுவதையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“வீரத்தையே கடவுளாக வணங்குகின்ற பழங்குடியில் தோன்றியவள் இவள், உயிரையும் உடலையும்விடமானத்தையும் ஆண்மையையும் பெரிதாகக் கருதுகின்ற குடும்பம் அது மூன்றாம் நாள் வேற்றரசன் நம் நாட்டின் மேல் படையெடுத்து வந்தான் அல்லவா? அன்று இவளுடைய தமையன் போர்க்களத்திற்குச் சென்றான். இவளும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் மகிழ்ச்சியோடு வழியனுப்பினர். வெற்றி வாகைசூடித் திரும்பி வருமாறு அவனை வாழ்த்தினர். அவன் யானைகளை எதிர்த்துப் போர்புரிவதில் வல்லவன். போரில் பகைவர்களின் யானைப் படைகளைச் சின்னாபின்னாமாக்கினான். எல்லோரும் வியக்குமாறு போர் செய்து இறுதியில் போர்க்களத்திலேயே இறந்து போனான் அவன். வீட்டுக்கு வர வேண்டியவன் விண்ணகம் சென்றுவிட்டான். வெற்றிமாலை சுமக்க வேண்டிய தோள்கள் போர்க்களத்து இரத்தத்தில் மிதந்தன. செய்தி யறிந்தது வீரக்குடும்பம். வருத்தமும் திகைப்பும் வாட்டமும் ஒருங்கே அடைந்தது. ஆனால் அவையெல்லாம் ஒரே ஒரு கணம்தான். மறுகணம் இவள் தன் ஆருயிர்க் கணவனை அழைத்தாள்.”