பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

57


ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் போகிறவர்கள் ஒற்றர்களாகக் கருதப்பட்டுத் தண்டனை பெற்றுக்கொண்டிருந்த காலம் அது!

உறையூர்க்காரர்கள் எவராவது கருவூருக்கு வந்தால் அவர்களை நெடுங்கிள்ளியின் ஒற்றர்கள் என்று சந்தேகித்துத் தண்டணை கொடுத்துக் கொண்டிருந்தான் நலங்கிள்ளி, கருவூர்க் காரர்கள் எவராவது உறையூருக்கு வந்தால் அவர்களை நலங்கிள்ளியின் ஒற்றர்கள் என்று சந்தேகித்துத் தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தான் நெடுங்கிள்ளி.

இளந்தத்தனோ இந்த இரு ஊர்களுக்கும் புதியவன். ஒரு நாடோடிப் புலவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவருக்கும் கடும்பகை இருப்பதை அறிந்துகொள்ளாமல் நலங்கிள்ளியைச் சந்தித்துப் பாடி பரிசில் பெற்றுக்கொண்டு கருவூரிலிருந்து உறையூருக்கு வந்து நெடுங்கிள்ளியிடம் பரிசில் வாங்க அவன் முயன்றான்.

அவன் உறையூர்க் கோட்டை வாயிலை அடைந்தபோது கோட்டைக் காவற்காரர்கள் அவனை இன்னாரென்று கூறுமாறு விசாரித்தனர். “நான் நலங்கிள்ளியிடமிருந்து பரிசில் பெற்றுக் கருவூரிலிருந்து வருகிறேன்” என்றான். ‘நலங்கிள்ளியிடம் பரிசில் வாங்கிக் கொண்டு வருகிறேன்’ என்றால் அது பெருமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டுதான் ஒரு பாவமுமறியாத அந்த இளம் புலவன் இப்படிக் கூறிவைத்தான்.

நலங்கிள்ளி, கருவூர் என்ற இந்த இரண்டு சொற்களை அவனிடமிருந்து கேட்டார்களோ இல்லையோ, கோட்டைக் காவற்காரர்கள் தங்களுக்குள் ஏதோ குறிப்புத் தோன்ற ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தக் கொண்டனர்.

“கருவூரிலிருந்துதானே வருகிறாய்!”

“ஆமாம்! கருவூரிலிருந்துதான்; நலங்கிள்ளியைச் சந்தித்துவிட்டு வருகிறேன்.”

“உனக்கு இங்கென்ன வேலை?”