பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

புறநானூற்றுச் சிறு கதைகள்


மற்றொருவன் துதிக்கையின்மேல் தனது வலது பாகத்தை ஒங்கி மிதித்துக் கொண்டு கொம்பைத் தேய்த்தான். கால்மேல் ஏறி நின்றுகொண்டு வேலை செய்தான் வேறொருவன். அது யானை! பயப்படத்தக்கது என்ற எண்ணமே அந்தப் பிள்ளைகளின் மனத்திலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றியது. ஏதோ சிறு குன்றின் மேல் ஏறி விளையாடுவதுபோல எண்ணிக்கொண்டு அவர்கள் வேலை செய்தனர்.

அவ்வளவிற்கும் இடமளித்துக் கொண்டு அமைதியாக நீரிற்கிடந்தது யானை.

“அதியா பார்த்தாயா வேடிக்கையை”

“தாயே! உரிமை பெருகப் பெருகப் பயம் குறைந்து நம்பிக்கை வளர்கிற விதத்தை இது காட்டுகிறது!”

“அதியா யானை ஒன்றும் செய்யாது என்ற எண்ணமே இந்த இளம்பிள்ளைகளை இவ்வளவு தைரியசாலிகளாக்கி விட்டிருக் கிறது. சற்றுமுன் பாகன் அழைத்தபோது மிரண்டவர்கள் வேறு யாருமில்லை இதே சிறுவர்கள்தாம்.”

“ஆமாம்! நானும் கவனித்தேன் தாயே...!”

இதற்குள் யானையை நீராட்டி முடித்துவிட்டதால் பாகர்கள் சிறுவர்களை விலகிக்கொள்ளச் சொல்லிவிட்டு நன்றாகக் கழுவினர். பின்பு அதை எழுப்பிக்கொண்டு அரண்மனைக்கு இட்டுச் சென்றனர்.

இருட்டிவிட்டதால் அதியமானும் ஒளவையாரும்கூட அரண்மனைக்குத் திரும்பினர்.யானையையும் அதைச் சிறுவர்கள் பயப்படாமல் தந்தம் கழுவிய நிகழ்ச்சியையும் இருவருமே மறக்கவில்லை.

ஏழெட்டு நாட்களுக்குப் பின்பு ஒரு நாள் நண்பகல் வெயில் அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. அதியமானும் ஒளவை யாரும் அரண்மனை மேல்மாடத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.