பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. ஒரு சொல்

உறையூரில் சோழன் நலங்கிள்ளியின் அரண்மனை. ஒருநாள் மாலைப் பொழுது நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானும் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரும் பொழுது போகச் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தாமப்பல் கண்ணனாருக்குச் சொக்கட்டான் விளையாட்டில் அதிகமான பழக்கமோ திறமையோ கிடையாது. ஆனால், அவரோடு விளையாடிக் கொண்டிருந்த மாவளத்தானுக்கோ அடிக்கடி அந்த விளையாட்டை விளையாடி விளையாடி நல்ல பழக்கமும் திறமையும் ஏற்பட்டிருந்தன. சாதாரணமாக இம்மாதிரித் திறமையால் ஏற்றத் தாழ்வு உடையவர்கள் எதிர் எதிரே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் தொடக்கத்திலேயே தகராறுகள் பெருகி முறிந்து போய்விடுவது வழக்கம்!

ஆனால் இங்கே மாவளத்தானுக்கும், தாமப்பல் கண்ணனாருக்கும் இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பண்பும், நட்பும், அன்பும் இருந்ததனால் விளையாட்டை முக்கியமாகக் கருதி அதிலேயே அழுந்தி வெறி கொண்டு விடாமல், ஏதோ பொழுது போக்காக ஆடிக் கொண்டிருந்தார்கள். வேறொருவர் இந்த விளையாட்டுக்கு அழைத்திருப்பாரானால் கற்றறிந்த பேரறிஞராகிய தாமப்பல் கண்ணனார் இதை ஒரு பொருட்டாக மதித்து விளையாட உட்காருவதற்கே உடன்பட்டிருக்க மாட்டார்.