பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

புறநானூற்றுச் சிறு கதைகள்


சோழன் தம்பியும், தன் அன்புக்குரியவனுமாகிய மாவளத்தானே விளையாடுவதற்கு அழைத்ததனால், ‘மறுத்தால் அவன் மனம் புண்படுமே’ - என்பதற்காகத்தான் அவர் விளையாடுவதற்கு முற்பட்டிருந்தார்.

சொக்கட்டான் விளையாட்டு நடந்துகொண்டிருந்தது. நேரம் ஆக ஆகப் பொழுது போக்குக்காக விளையாட்டு என்ற நிலை மாறி, விளையாட்டுக்காகப் பொழுது போக்கு என்ற அளவிற்கு இருவருக்குமே ஆட்டத்தில் அக்கறையோடு சுறுசுறுப்பும் ஏற்பட்டுவிட்டது. இரு சாராருடைய சொக் கட்டான் காய்களும் வேகமாக இடம் மாறலாயின. ஆட்டம் சுவையம்சத்தின் எல்லையிலே போய் நின்றது. இரண்டு பேரும் சுற்றுப்புறத்தை மறந்து, நேரத்தை மறந்து, - அவ்வளவேன்? - தங்களையே மறந்து விளையாட்டில் இலயித்துப் போய் இருந்தார்கள்.

தொடக்கத்தில் இருந்த அசுவாரஸ்யம் நீங்கி, ‘என் வெற்றி, என் தோல்வி’- என்று இருவரும் தத்தம் வெற்றி தோல்விகளை உணர்ந்து கவனத்தோடு விளையாடத் தொடங்கியிருந்தார்கள். இப்போது, புலவருக்காக மாவளத்தானோ, மாவளத்தானுக்காகப் புலவரோ விட்டுக்கொடுக்க விரும்பாத அளவு இருவரும் தமக்காக வென்றே விளையாடினார்கள்.

எவ்வளவுதான் உணர்ந்து விளையாடினாலும் தாமப்பல் கண்ணனார் அந்த விளையாட்டிற்குப் புதியவர்தாமே? ஆகையால், மாவளத்தானுடைய கையே ஓங்கியிருந்தது. ஆட்டந் தவறாமல் புலவருடைய காய்களை ஒவ்வொன்றாக வெட்டி வென்று வந்தான் மாவளத்தான். புலவர் தாமப்பல் கண்ணனார் எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒர் ஆட்டத்தில்கூட அவரால் மாவளத்தானை வெல்ல முடியவில்லை.சொல்லி வைத்தாற்போல் ஆட்டத்திற்கு ஆட்டம் அவருடைய தோல்வியும், மாவளத்தானுடைய வெற்றியுமே முடிவான நிகழ்ச்சியாக இருந்தது.