பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


16. மழலை இன்பம்

ஆந்தை கத்துவது போலவும், காக்கை கரைவது போலவும் மற்றவர்களுக்குக் கேட்க முடியாத ஒலியாக இருந்தாலும் பெற்றவர்களுக்கு அது குழந்தையின் மழலை. அதனால் அவர்கள் அடையும் இன்பமே தனி உவமை கூற முடியாத இன்பம் அது.

ஒரு சமயம் அதியமான் என்ற வள்ளலிடம் இந்த மழலை இன்பத்தைப் பற்றி விளக்கிக் கூற வேண்டிய அவசியம் ஒளவை யாருக்கு ஏற்பட்டது. வீரனாகவும் வள்ளலாகவும் விளங்கும் அதியமானுக்குத் தம்முடைய பாட்டுக்கள் கூட ஒருவகை மழலைதான் என்று சாதுரியமாகக் கூறியிருக்கிறார் ஒளவையார், குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணி அவர்கள் மழலை கேட்டு இன்புறும் பெற்றோர்களைப்போல் புலவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணி அவர்கள் கவிதைகளைக் கேட்டு இன்புறும் அதியமானை நமக்குச் சித்திரித்துக் காட்டுகிறது ஒளவையாரின் பாட்டு!

ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைக் கேட்போம்.

“அதியர் கோவே! குழந்தைகளின் மழலை என்று பெற்றோர்கள் தேனாகவும் பாலாகவும் கருதி வானளாவப் போற்றுகிறார்களே. யாழ் வாசிப்பதைப்போல அவ்வளவு இனிமையா மழலை மொழிகளில் நிறைந்திருக்கின்றது?” ஒளவையார் ஒரு தினுசாக நகைத்துக் கொண்டே கேட்டார்.

“இருந்தாற்போலிருந்து திடீரென்று மழலையைப் பற்றி ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? அதில் தங்களுக்குத் தெரியாதது எனக்கென்ன தெரியப்போகிறது?” என்றான் அதியமான்.

“அதற்குச் சொல்ல வரவில்லை அதியா அதில் வேறு ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. அதை விளக்குவதற்காகவே உன்னிடம் இதைப் பற்றிக் கேட்டேன்.” ஒளவையார் அதியமானைக் கூர்ந்து நோக்கினார்.