பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

7


தொடர்ந்து வெற்றி மாவளத்தானை மேலும் மேலும் வெற்றி கொள்ளச் செய்திருந்தது. தாமப்பல் கண்ணனார் தோல்வி ஏக்கத்தில் வீழ்ந்து தவித்துக் கொண்டிருந்தார்.

சந்தர்ப்பம் மனிதர்களைக் கெட்டவர்களாக்கி விடுகிறது என்பது பொய்யன்று. எப்படியாவது ஒரு தடவையேனும் மாவளத்தானை வென்றுவிடவேண்டும் என்ற ஆசையால் புலவர் நேர்மையற்ற முடிவு ஒன்றைத் தமக்குள் செய்துகொண்டார்.அந்த முடிவின் விளைவு என்ன ஆகும் என்பதை அப்போது அவர் உணர்ந்து கொள்ளவில்லை. சூதாட்டத்தில் தாம் வெற்றிபெற மறைமுகமான குறுக்கு வழி ஒன்று அவருக்குத் தெரிந்துவிட்டது. ஆம்! மாவளத்தானுக்கு வெற்றியைத் தரும் காய்களில் ஒன்றைத் தன் மேலாடையில் அவனறியாமல் எடுத்து மறைத்துக் கொண்டு விட்டார். திடீரென்று அவர் இப்படித்திருட்டுத்தனம் செய்ததைச் சிறிது நேரத்தில் மாவளத்தான் கண்டுவிட்டான்.

அந்த ஒரு கணத்தில் அவனுக்கு ஏற்பட்ட அளவிட முடியாத ஆத்திரத்தினால் தன் எதிரே உட்கார்ந்து விளையாடுபவர் தன்னுடைய மதிப்பிற்குரிய புலவர் என்பதையே மறந்துவிட்டான். கோப மிகுதியினால் என்ன செய்கிறோமென்று புரியாமல் தன் கையிலிருந்த மற்றோர் காயால் புலவர் மண்டையைக் குறிவைத்து எறிந்துவிட்டான் அவன். சூதுக்காய் புலவர் மண்டையில், நெற்றியின் மேல் விளிம்பில் ஆழமாகத் தாக்கி இரத்தம் கசிந்துவிட்டது.

அவன் இப்படிச் செய்வான் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. தாம் செய்தது குற்றமாயினும், அவன் செய்த வன்செயல் அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கிவிட்டது. குருதி கசியும் நெற்றியை வலதுகையால் அமுக்கிக்கொண்டே, “நீசோழனுக்குப் பிறந்த மகன்தானா?” என்று அவனை நோக்கி இடி முழக்கம் போன்ற குரலில் கேட்டார். அவருடைய இந்த ஒரு சொல்லின் பொருள், சோழன் தம்பி அவர்மேல் எறிந்த சொக்கட்டான் காயைவிட வன்மையாக அவனை வருத்தக்கூடியது.