பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

புறநானூற்றுச் சிறு கதைகள்


தெருவில் பலர் கூடி நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் முகத்திலாவது புன்னகை இல்லை. ஆடவன் இறந்துவிட்டான் அந்த வீட்டில், அவனுடைய அந்திம யாத்திரைக்கான ஏற்பாடுகள் தாம் அங்கே நடந்து கொண்டிருந்தன. இறக்கப் போகிறவர்கள் இறந்தவனுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இங்கும் புலவருக்கு மேலே நடந்து செல்ல வழி இல்லை. சில விநாடிகள் தயங்கி நின்றார். அந்த வீட்டையும் ஏற இறங்கப் பார்த்தார். பழைய மங்கல ஒலியும் இந்தப் புதிய அழுகை ஒலியும் அவர் மனத்தில் ஒன்றாகப் பதிந்திருந்தன.

கோலமிட்ட வீடும், கோலமிடாத வீடும், பூ வைத்த பெண்ணும், பூவைக்காத பெண்ணும் அவர் கண்களின் பார்வைப் புலத்துள் நின்றார்கள்.

‘ஒரு வீட்டில் மங்கலகரமான கலியாணம் ஒரு வீட்டில் துயரம் நிறைந்த சாவு. சில பெண்களின் தலை நிறையப் பூ! இன்னும் சில பெண்களின் கண் நிறையக் கண்ணிர்! இந்த உலகத்தில் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா? இதைப் படைத்தவன் என்ன அர்த்தத்தில் படைத்தான்? நன்கணியார் சிந்தித்துப் பார்த்தார். சிந்தனைக்குள் ஆழ்ந்து நிற்கும் தத்துவ மின்னல் ஒன்று அவர் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. ஒரு தெருவின் இரண்டு வரிசைகளுள் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளா? இவ்வளவு இன்ப துன்பங்களா? அப்பப்பா இந்த உலகம் எவ்வளவு பொல்லாதது? இதைப் படைத்தவன் மட்டும் என்ன? அவனும் ஒரு பொல்லாத வனாகத்தான் இருக்க வேண்டும்? இல்லையென்றால் இப்படிப் பொருத்தமில்லாத நிகழ்ச்சிகளை ஒரே உருண்டைக்குள் போட்டுக் குழப்புவானா? ஆம் ஆம்! இந்த உலகம், இதைப் படைத்தவன் தடுமாற்றத்திற்கு ஒரு அடையாளம்; உண்டாக்கியவனின் குழப்பத்திற்கு ஒரு சின்னம் சந்தேகமென்ன? அப்படித்தான்!

நன்கணியாருக்கு இந்த உலகத்தைப் பற்றிய தத்துவம் தெருவீதியின் பத்தடி தூரத்திற்குள்ளேயே கிடைத்து விடுகிறது.