பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

காரர், என்னென்னவாறு நடந்து கொண்டால், ஆட்டம் மேலும் செழுமைபெறும் என்பதையும் கவனிப்போம்.

1. பந்தை எடுத்தாடும்பொழுது, மெதுவாக ஆடாமல், உடனே விரைவாக எதிராட்டக்காரர் பகுதிக்கு அனுப்பிவிடவேண்டும். அப்பொழுதுதான், அவரை விரைவில் களைக்க வைக்க முடியும்.

2. பந்தை உயர்த்தி (Lob) ஆடுகின்ற நேரத்தில், ஆடுகளத்தின் கடைக் கோட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்து விடவேண்டும். அல்லது பக்கக் கோட்டுக்குப் பக்கமாக அனுப்ப வேண்டும் அப்பொழுதுதான், அடித் தாட முயலும் எதிராட்டக்காரர் ஆட முடியாமல் திணறி, தவறுகள் இழைக்க நேரும். அதனால், வெற்றி எண்கள் அதிகம் பெற வாய்ப்பு பெருகும்.

3. எதிராட்டக்காரரின் ஆட்டக் குறைபாட்டை (weakness) தெரிந்து கொண்டு, அவரே அடிக்கத் துண்டுவது போல் பந்தை அனுப்பி, தவறுக் குள்ளாக்க முயல வேண்டும்.

4. எதிராட்டக்காரர் கடைக்கோட்டுப் பகுதியில் நின்று கொண்டு பந்தை அடித்து (Smash) அனுப்பும் பொழுது, உடனே எடுத்தாடுபவர் பந்தை எடுத்து முன்னெல்லைப் பகுதி (Fault line) ஓரமாகப் போட்டு விட வேண்டும்.

ஏனெனில், பின்புறமிருந்து அடித்துவிட்டு, உடனே முன்பகுதிக்கு ஓடிவந்து பந்தைஎடுத்தாடுவது என்பது மிக மிகக் கடினமான காரியமாகும்.