பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-9-


பெருநிரை விலங்கி யாண்டுப் பட்டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே."

என்னும் புறப்பாட்டால் அறியலாம். நாம் பிள்ளையை அனுப்புவதாயிருந்தால், தலைவாரிவிட்டு உடை உடுத்திய பின்னரே வேலை எடுத்துக் கையில் கொடுப்போம். ஆனால் அந்த மறமங்கையோ, முதலில் வேலை எடுத்துக் கையில் தந்துவிட்டாளாம்; பின்னரே உடை உடுத்தல், தலை வாருதல் ஆகியன செய்தாளாம். அவளது பேரூக்கமாகிய போரூக்கம் என்னே!

வயது முதிர்ந்த ஒரு மற மூதாட்டியிடம் பலர் வந்து, 'உன் மகன் போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்' என்று கூறினராம். கேட்ட கிழவி. இருக்காது. நீங்கள் சொல்வது நடந்திருக்கமுடியாது. ஒரு காலும் என் செல்வன் புறமுதுகிட்டு ஓடவேமாட்டான். அவனை நீண்டநேரம் காணாததால் நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்கள் போலும்! என் மகன் செருக்களத்தில் மார்பில் விழுப்புண் பட்டு இறந்து கிடப்பான். ஒருவேளை நீங்கள் உரைப்பது உண்மையாயின், அவன் பாலுண்ட என் கொங்கைகளை அறுத்தெறிவேன்' என்று சூள் உரைத்தாள்: கையில் வாள் ஒன்றை எடுத்துக்கொண்டாள்; செருக்களம் சென்று பிணங்களைப் புரட்டினாள்; தன்மகன் விழுப்புண் பட்டுச் சிதைந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டாள். ஐயோ மகனே போய்விட்டாயா என்று ஒப்பாரி வைத்தாளா? இல்லவேயில்லை. தாய்நாட்டிற்காக உயிர் நீத்த அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் இப்போது பெருமகிழ்ச்சி கொண்டாளாம்! மயிர் சிலிர்க்