பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-16-


வேண்டிய ஆயத்தங்களை அனைவரும் முன்கூட்டியே முடித்து வைத்திருக்கவேண்டுமல்லவா? வெள்ளம் வந்த பின் அணைகோல வியலுமா?

அன்பு நெறியினை உலகிற்கு அருளிய புத்தர் பெருமான் தோன்றிய நாட்டில் பிறந்த நாம், அமைதி முறையினை உலகிற்கு அறிவுறுத்திய காந்தியடிகள் தோன்றிய நாட்டில் பிறந்த நாம், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுரைத்த அருளே உருவான இராமலிங்க அடிகளார் தோன்றிய நாட்டில் பிறந்த நாம், இன்றைய உலக அமைதிக்காக எவ்வளவோ முயன்ற பாடுபட்டுள்ளோம்-பாடுபட்டும் வருகிறோம். அத்தகைய நம்மையே, இன்று பாகிஸ்தான் உருவத்திலும் சீன வடிவத்திலும் போர் வலிய அழைக்கிறது. எனவே, எப்போதும் போர் முரசங்கொட்ட நாம் ஆயத்தமாகவே இருக்கவேண்டும்.

இருவர் இருக்கும்வரை

போர் எப்போது வரும்-எப்போது வராது போர் எங்கே வரும்-எங்கே வராது என்று எவராயினும் அறுதியிட்டு உறுதி கூற முடியுமா? இன்னும் கேட்டால் போரின்றி உலகமில்லை-போரின்றி மக்கட்குலமில்லை என்று துணிந்து கூறமுடியும். உலகில் இன்னும் எத்தனை, 'அவதார புருடர்கள்' தோன்றினாலும், எத்தனை வேத ஆகம உபநிடத இதிகாச புராண சாத்திர காவிய இலக்கியங்கள் தோன்றினாலும் உலகில் போர் தோன்றாமல் இருக்கச் செய்ய முடியவே முடியாது; ஆனால் தோன்றிய போரை அடக்க முடியும் - சிறிது காலம் தடுத்து நிறுத்தி வைக்க முடியும் அவ்வளவுதான்! பசி தாகம் வராமல் இருக்கச் செய்ய முடியாது; ஆனால், வந்தால் உணவும் நீரும் கொடுத்துச் சில மணி நேரம் அடக்கி நிறுத்தி வைக்க முடியும். அவ்வளவுதான்! மீண்டும் பசி தாகம்