பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-19-


நமது பங்கு

பொதுவாக நாட்டு மக்கள் அனைவரும் போர் வீரர்களாக மாறி விடுவதன்றி, சிறப்பாகவும் ஒவ்வொருவர்க்கும் சில பங்குகள் உண்டு. உடல் வன்மை மிக்கோர் ஊர்க்காவல் படையிலும் போர்ப் படையிலும் சேர்ந்து நாடு காக்கவேண்டும். தடைபடாக் குருதி யோட்டமுடைய தளரா இளைஞர்கள்-மாணவர்கள் போர் அரங்கில் புண்படும் மறவர்கட்காகக் குருதிக்கொடை நல்கவேண்டும். செல்வரும் மகளிரும் பொன்னும் பொருளும் அணிகலன்களும் வரையாது வாரி வழங்க வேண்டும். குறைந்த வருவாயுடையோரும் தங்களால் இயன்றதை அரசுக்கு அளிக்கவேண்டும். வணிகர்கள் பேராதாயங் கருதிப் பொருள்களைப் பதுக்காமலும், கலப்படம் செய்யாமலும், விலையேற்றாமலும், அளவு குறைக்காமலும் அற விலைக்கு விற்கவேண்டும். உழவர்களும் தொழிலாளிகளும் உணவுப் பொருட்களையும் மற்ற பிற பொருட்களையும் ஒயாது உண்டாக்கி உதவ வேண்டும். தொழிலாளர் எவரும் கதவடைப்போ, வேலை நிறுத்தமோ, உண்ணா நோன்போ ஒத்துழையாமையோ செய்யவே கூடாது. அரசு அலுவலர்கள் மணியைப் பார்க்காமலும் ஊதியத்தைப் பொருட்படுத்தாமலும் அல்லும் பகலும் அயராது ஆக்கப் பணிபல ஆற்ற வேண்டும். ஒன்றும் இயலாதவர்கள் தங்கள் உணர்ச்சிமிக்க உரைகளின் வாயிலாக மற்றவர்க்கு ஊக்கமும் வலிமையும் ஊட்ட வேண்டும். பொய்யுரைகளையோ திரிபுச் செய்திகளையோ யாரும் பேசவோ பரப்பவோ நம்பவோ கூடாது.

மேற்கூறியுள்ளாங்கு நடந்து கொள்ளாதவர் எவரோ அவரே நாட்டின் பகைவராவார். மாற்றானுக்கு இடங்கொடுக்கும் ஒற்றராகவே அவர் கருதப்படவேண்டும்.