பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-5-


"அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
இனி நட்டனரே கல்லும்"
"ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும்"
"புடை நடுகல்லின் நாட்பலி யூட்டி
"நன்வீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்"
"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே"

முதலிய புறநானூற்றுப் பாடல் பகுதிகளால் அறியலாம். இவற்றுள் இறுதிப் பாடலில், பகைவருடைய யானைப் படையை அழித்தொழித்து இறந்துபோன மறவனது 'நடுகல்' தவிர, வணங்குதற்குரிய கடவுள்கள் வேறு இல்லை என்று கூறப்பட்டிருக்கும் கருத்து ஈண்டு எண்ணத்தக்கது. போரில் மறச்செயல் ஆற்றி மடிந்துபோன மறவனுக்குக் கல் எடுத்து அவனைக் கடவுளாக மதித்து நம் முன்னோர் வழிபட்டன ரென்றால், நாட்டுக்காகப் போர் முனையில் உயிர் கொடுப்பது எவ்வளவு பெரிய புகழ்ச் செயலாகக் கருதப்பட்டிருக்கவேண்டும்?

புகழ் மரபு

அந்தப் புகழ் மரபு இன்றும் நம்மைவிட்டுப் போக வில்லை. தெரிந்தோ தெரியாமலோ வாழையடி வாழையாக அம்மரபு நம் நாட்டவரால் பின்பற்றப்பட்டே வருகிறது. போரில் உயிர் ஈந்த மறவனுக்குக் கல் எடுப்பது அதாவது கல் நடுவது மரபு. எப்போதுமே போர் நடந்து கொண்டிருக்குமா? எல்லாருமே போரில் இறக்க முடியுமா?