பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பல புதிய உடல்களை ஆக்கிப் படைத்து உருவாக்கி விடுகிறது. அது மட்டுமோ? அந்த உடல்கள் ஒவ்வொன்றிலும் அது தன்னை ஒத்த பண்புடைய புதிய உயிராற்றல்களை- அதாவது உயிர்களையும் படைத்து விடுகிறது. தன்னை ஒத்த ஒன்றைத் தானே படைப்பது என்பது எவ்வளவு அருமை? தன்னை ஒத்த பலவற்றைப் படைத்து, ஒன்று பல ஆக்குவது என்பது இன்னும் எவ்வளவு அருமை? இந்த இரண்டு ஆற்றல்களும் உயிரிலா இயற்கைக்கு இல்லாத, உயிருக்கே உரிய தனிப் படைப்பாற்றல்கள்! கடவுளுக்குக் கூட இந்த இரண்டு ஆற்றல்களும் இருப்பதாகப் பல அறிஞர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். என்பது இங்கே ஊன்றிக் கவனிக்கத் தக்கது. * இயற்கையின் ஆற்றல்களுள் உயிராற்றலைவிட வியப்புடை எதுமில்லை. அது தலைமுறை கடந்து தலை முறையாக, ஊழி கடந்து ஊழியாக, உயிரினத்தின் உடற்பண்புகளை நீடித்து நிலவி வாழ வைக்கிறது. இதன் மூலம் அது இயற்கையின் கால எல்லையைத் தாண்டி விடுகிறது. மேலும் அது தளர்ச்சிப் பண்புகளைத் தலைமுறை கடந்து புதுத் தலைமுறைக்கு வரவிடுவதில்லை. வளர்ச்சிப் பண்புகளை மட்டுமே தொடர்ந்து ஆக்கம் பெறவிடுகிறது. இதன் மூலம் அது மெள்ள படிப்படியாக இயற்கையின் இடை எல்லையையும் ஆற்றல் எல்லையையும் வெல்ல வழி வகுக்கிறது. இயற்கையில் ஒரு கல் என்றும் இரண்டு கல் ஆகாது மற்றும், ஒரு சிறிய கல் எப்போதும் ஒரு சிறிய கல்லாகத்தான் இருக்கும், பெரிய கல் ஆகிவிடாது. இது போலவே ஒரு படிமணல், ஒரு பலம் மணல் எந்தக் காரணத்தினாலும் இரண்டுபடி மணலாகவோ இரண்டு பலம் மணலாகவோ பெருக்கமடைய முடியாது. இயற்கையின் இந்த மாறுபடாத, வளர்ச்சியற்ற தன்மையை மாற்றி உயிர்ப்பண்பு வெற்றி கண்டுவிடுகிறது. எப்படியெனில், இயற்கையின் ஆட்சிக்குள்ளாகவே சிற்றுயிர் பேருயிர் ஆவதையும், ஒருயிர் பல உயிர்களாகப் பெற்றுப் பெருகுவதையும் நாம் காண்கிறோம். பல தலை முறைகள், ஊழிகள் கடந்து, ஓரறிவுயிர் படிப்படியாக ஈரறிவுயிர், மூவறிவுயிர் என்ற முறையில் வளர்ந்து, ஐயறிவுயிராகவும் ஆறறிவுயிராகிய மனிதனாகவும் மலர்கின்றது சென்ற 19-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உயிர் நூலறிஞர் களான சார்ல்ஸ் டார்வின், லமார்க் போன்றவர்கள் இதை ஆராய்ச்சி