பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 விழுமிய மனிதர்களாக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அதைத் தம் பாட்டினால் எழுத்தினால் செய்ய முடியுமென்று அவர் நம்பினார். தனிப்பட்ட மனிதனை மட்டுமல்ல; தாரணி முழுவதையுமே தம் பாட்டுத் திறத்தாலே பாலித்திட முடியும் என்று அவர் தம்மால் முடிந்த வரை முயன்றார். பாரதிக்கு இருந்த இந்த உன்னத இலட்சியமும் தன்னம்பிக்கையும் இன்றையக் கவிஞர்களில், எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது? இன்று தமிழ் நாட்டில் இருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களில், கவிஞர்களில் இலட்சியவாதிகளாக இருப்பவர்களை - தன்னம்பிக்கையுடையவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும் பாலார்க்கு இலக்கியம் செய்யும் விஷயத்தில் எவ்வித இலட்சியமும் கிடையாது. இலக்கியம் செய்வதற்கு ஓர் இலட்சியம் உண்டு என்பதே பலருக்குத் தெரியாது. பொழுது போக்குக்கு ஏதோ எழுத வேண்டும் என்பதாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். இலக்கியம் என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதே நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேருடைய எண்ணம். 'இலக்கியத்துக்கு ஒர் இலட்சியம் உண்டு. மனிதர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை இலட்சியத்தை நினைவு படுத்துவதே இலக்கியத்தின் முக்கிய வேலை. மனிதர்களுடைய வாழ்வில் தன்னம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டுவதே இலக்கியத்தின் நோக்கமாயிருக்க வேண்டும்' என்ற அடிப்படைக் கொள்கைகளையும் உண்மைகளையும் அவர்களில் பலர் இன்னும் அறியவில்லை. இன்று பத்திரிகைகள், புத்தகங்கள் பெரும்பாலானவை ஒரே போக்கில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள் நடத்துவோரும், புத்தகப் பிரசுரகர்த்தர்களும் வெறும் வியாபார நோக்கோடு மட்டுமே பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வெளியிடுகின்றனர். பாமரமக்களுக்குப் பிடிக்கும் சாதாரண விஷயங்கள், மக்களுடைய கீழ்த்தரமான உணர்ச்சிகளைக் கிளறிவிடும் கதை கட்டுரைகள், சிற்றின்ப மூட்டும் சிருங்காரப் பாடல்கள் தாம் பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளி வருகின்றன; புத்தகங்களாக உருக்கொண்டும் உலவுகின்றன. இந்நிலையில் பாரதியாரைப் பின்பற்ற முயலும் இலட்சிய எழுத்தாளர்களுக்கு இடம் எங்கே? எழுத்தை - எழுதுவதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் வாழ்வது எப்படி? எழுத்து மூலமாக வாழ்க்கை நடத்துவதற்குரிய வருமானத்தை எதிர்பார்த்து எழுதுபவர்கள் பத்திரிகாசிரியர்கள், பதிப்பாளர்களின்