பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.

87


கொள்ளாமல், அன்றாடம் பூக்கும் புதுமலர்போல, அன்பால் தினமும், கணவனைப் பராமரித்து காத்துவரும் மனப்பான்மையை மனைவி அறிந்து நடக்க வேண்டும்.

கணவனது பணி என்ன, கடமை என்ன என்பதை அறிந்து, முடிந்தால் கணவனுக்கு ஒத்தாசை செய்யலாம். முடியவில்லை என்றால் துணையாகவே சேவை செய்யலாம். இல்லையென்றால் தேவையானதைத் தந்து பக்கபலமாக விளங்கலாம்.

தன் கணவனுடைய உடல் சக்தியும், மன வலிமையும் தான் வாழ்வின் முன்னேற்றக் காரியங்களுக்குப் பயன்படுவதுபோல, மனைவியின் ஒத்துழைப்பு இருக்கவேண்டும்.

சில்லரைத் தனமாக சிறு காரியங்களுக்குக்கெல்லாம் சண்டைபோட முயல்வதும், பணத் தகராறு போன்றவற்றிலும் பூசல்களுக்கு முயல்வதும் , அற்பத்தனமானவைகளுக்கு கூட ஆர்ப்பாட்டம் செய்வதும், நல்ல குடும்பப் பெண்ணுக்கு அழகல்ல. சஞ்சலம் கொடுக்காது, மனைவியே கணவனைக் காக்கவேண்டும்.

சில சமயங்களில் கருத்து வேறுபாடு வரும். வராது என்று சொல்வதற்கில்லை. அப்படி வந்துவிட்டால் வார்த்தை தடித்து, வாதம் அதிகமாகி, அடிதடியில் இறங்கி விடுகின்ற சூழ்நிலையும் அமையலாம். அப்படிவராமல் தவிர்த்துக் கொள்வதுதான் அறிவுடையோர்க்கு அழகாகும்.

வாக்குவாதம் வருவது தவிர்க்க முடியாததாகி விட்டால், அதனால் ஊடல் நிகழ்ந்தால், அந்த சிறு பூசல் அவர்கள் மனத்திலிருக்கும் அறியாமை அழுக்கைப் போக்குவதற்காகப் பயன்பட்ட அருமையான அனுபவமாக அவர்கள் கருதவேண்டுமே தவிர, வேறல்ல என்று கொள்ளவேண்டும்