பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


அட்டவணை விளக்கத்தில் வரையறுத்துக் கண்டோம். அந்த அட்டவணையில் இங்கு நாம் கண்ட அந்துவன் கால்வழியில் தோன்றிய அரசர்களது ஆட்சிக் காலமும் காட்டப்பட்டுள்ளது.

அங்கு நாம் வரையறுத்துக் கொண்டது போலவே ஒரு தலை முறைக்கும் மற்றொரு தலைமுறைக்கும் இடையிலுள்ள காலம் இருபத்தைந்து ஆண்டுகள் என்றும், அண்ணனுக்கும் தம்பிக்கும் அல்லது அக்காளுக்கும் தங்கைக்கும் இடையிலுள்ள காலம் ஐந்து ஆண்டுகள் என்றும் வைத்துக்கொண்டு இவர்களது காலத்தையும் விளக்கமாகக் காணலாம்.

உதியன் கால்வழி அரசர்களை மூத்த தலைமுறை என்றும், அந்துவன் கால்வழி அரசர்களை இளைய தலைமுறை என்றும் பொதுவாக அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, உதியன் கால்வழியைச் சார்ந்த நெடுஞ்சேரலாதனை மணந்தவள் அக்காள் என்றும், அந்துவன் கால்வழியைச் சார்ந்த செல்வக்கடுங்கோவை மணந்தவள் தங்கை என்றும் நாம் உய்த்துணருதல் பொருத்தமுடையதாகும். அக்காள் தங்கையருக்கிடையே ஐந்து ஆண்டு இடைவெளி என்னும் கோட் பாட்டை நாம் கொண்டிருப்பதால் அக்காளை மணந்த நெடுஞ்சேரலாதன் அரியணை ஏறியபின் தங்கையை மணந்த செல்வக்கடுங்கோ வாழியாதன் ஐந்து ஆண்டுகள் கழித்து அரியணை ஏறினான் என முடியும்.

நெடுஞ்சேரலாதன் கி. பி. 95-ல் அரியணை ஏறினான் என்று பார்த்தோம். எனவே, செல்வக்கடுங்கோ வாழியாதன் கி.பி. 100-ல் அரியணை ஏறினான் எனலாம். நம் கோட்பாட்டுப்படி செல்வக் கடுங்கோவின் தந்தை அந்துவன், அவனுக்கு 25 ஆண்டுகட்கு முன்பு (அதாவது, கி.பி. 75 - 100 ஆண்டுகள்) அரசாண்டான் எனத் தெரிய வரும். 25 ஆண்டுகள் அரசாண்டான் என்று பதிற்றுப்பத்துப் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்வக்கடுங்கோ வாழியாதன் கி. பி. 100 - 125 கால இடைவெளியில் அரசாண்டான் எனவும், 17 ஆண்டுகள் அரசாண்ட பெருஞ்சேரல் கி. பி. 125 -142 ஆண்டு இடைவெளியில் அரசாண்டான் எனவும் நாம் கொள்ளலாம். பெருஞ்சேரல் ஆண்ட காலத்திற்கும் இளஞ்சேரல் ஆண்ட காலத்திற்கும் இடையிலுள்ள காலத்தில் இளஞ்சேரலின் தந்தையும் வேறு சிலரும் ஆண்டிருக்கக் கூடும். ஆதலால், இளஞ்சேரல் இரும்பொறை கி. பி. 150 - 171 (16 ண்டுகள்) இடைவெளியில் அரசாண்டான் என்பது தெரியவரும்.