பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



“குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண்சாக்கியப்பேய் மிண்டரைக் கண்டதன்மை விரவாகிய தென்னைகொலோ”

“மோடுடைய சமணர்க்கும் உடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்ற மன்றே”[1]

சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஜைனர்களைப் பற்றியும் பௌத்தர்களைப் பற்றியும் இவ்வாறு பல முறைகளில் கூறியிருக்க, ஜைனர்களைப்பற்றி ஒரு இடத்திலும் கூறவில்லை என்று திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது! “ஜைனர்களைப் பற்றி ஒரு குறிப்பாவது காணப்படவில்லை” என்று திரு. எஸ். வையாபுரிப் பளிள்யைவர்கள் எழுதுகிறார்.[2] சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்த பிள்ளையவர்கள் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு கூறுவது வருந்தத்தக்கது. அதிலும், தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வாறு மாறுபட எழுதுவது கண்டிக்கத்தக்கது. இது உண்மைக்கு மாறுபட்ட தவறான கருத்து என்பது, மேலே சுந்தரர் தேவாரத்திலிருந்து காட்டப்பட்ட மேற்கோள்களினால் நன்கு விளங்குகிறது.

ஜைன பௌத்த மதங்கள் கி.பி.9-ஆம் நூற்றாண்டிலே வலிமை குன்றிய போதிலும் உடனே அவை அழிந்துவிடவில்லை. பையப்பையத் தளர்ச்சியடைந்து கொண்டே அச்சமயங்கள் 12, 13-ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைநின்றிருந்தன. பௌத்த மதம் பின்னர் அடியோடு மறைந்துவிட்டது. ஆனால், சமண சமயம், குன்றிப்போன நிலையிலாயினும் இன்னும் நிலைபெற்றிருக்கிறது.

2. வைணவ சமயம்

அக்காலத்தில் வைணவ சமயமும் சிறப்படைந்திருந்தது. சைவ சமயத்தைப் போலவே வைணவ சமயமும் பக்தி இயக்கத்தில் ஈடுபட்டுச் சமண பௌத்த மதங்களைத் தாக்கிற்று. தெள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மல்லன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலைநிறுத்தினார். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த வைணவ அடியார்கள் யார் என்பது தெரியவில்லை.

  1. 14
  2. 15