பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
349
3. சைவ சமயம்
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சைவ சமயம் உயர்ந்த நிலையில் இருந்தது. சைவ சமய ஆர்வம் நாடெங்கும் பரவியிருந்தது. அப்பர் சம்பந்தர் காலத்தில் இருந்த காபாலிகம், பரசுபதம், பைரவம் முதலிய சைவ சமய உட்பிரிவுகள் இக்காலத்திலும் இருந்தன. இந்த உட்சமயங்கள், பௌத்த சமண சமயங்கள் மறைகிற வரையில் தமிழ் நாட்டில் இருந்து பிறகு பையப் பைய மறைந்துவிட்டன. இந்த மதங்கள் பௌத்த சமண சமயங்களை அழிப்பதில் முனைந்து நின்றதாகத் தெரிகின்றன. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் முதலியோர் சைவ சமயத்திற்குப் பெரிதும் உழைத்தனர். அவர்களைப்பற்றி இங்கு ஆராய்வோம்.
சுந்தரமூர்த்தி நாயனார்
திருமுனைப்பாடி நாட்டுத் திருநாவலூரில் சடையனார் என்னும் ஆதிசைவப் பிராமணர், இசைஞானியார் என்னும் மனைவியாருடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு நம்பி ஆரூரர் என்று பெயரிட்டு வளர்த்தார்கள். இந்தக் குழந்தை பிற்காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் என்றும் வன்றொண்டர் என்றும் தம்பிரான் தோழர் என்றும் சேரமான் தோழர் என்றும் பெயர்பெற்று விளங்கிற்று.
அக்காலத்தில் திருமுனைப்பாடி நாட்டை அரசாண்டவர் நரசிங்க முனையரையர் என்னும் சிற்றரசர். இவர் சிறந்த சிவபக்தர், சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். பல்லவ அரசர்களுக்குக் கீழ் சிற்றரசராக இருந்தவர். நரசிங்க முனையரையர், நம்பி ஆரூரார் என்னும் குழந்தையின் அழகைக் கண்டு அதன்மேல் ஆசை கொண்டார். குழந்தையின் தந்தையாராகிய சடையனாரின் இசைவு பெற்று, அக்குழந்தையைத் தமது மாளிகைக்கு அழைத்துக கொண்டு போய் அன்போடு வளர்த்து வந்தார். அக்குழந்தை இளமைப் பருவத திலேயே ஆதி சைவருக்குரிய ஆகம நூல்களையும் அரசர்க்குரிய யானையேற்றம் குதிரையேற்றம் முதலிய கலைகளையும் கற்றுத் தேர்ந்து காளைப்பருவம் அடைந்தது. பதினாறு வயதடைந்த நம்பி