352
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
என்று பாடினார். இதில், ஒழுக்க என் கண்ணுக்கு ஒரு மருந்து உரையாய் என்பதில், “கண்படலம் நீங்குவதற்குத் தகுந்த ஒரு மருந்தை எனக்குக் கூறுவாயாக” என்று ஒரு பொருளும், கண்ணுக்கு இடுவாயாக” என்னும் மற்றொரு பொருளும் தரும்படியாகப் பாடியிருப்பது காண்க.
மேலும், பார்வை மறைந்ததை மிகத் துயரத்தோடு பாடினார்.
“மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தென்னே கணக்கு வழக்காகில்
ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே”
என்றும்,
“மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்
மைந்தனே மணியே மண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையேல் போகுரு டானெத் தரியேன்”
என்றும் பாடியது மனத்தை உருக்குகிறது.
அடியவர் சிலர் வழிகாட்டச் சுந்தரமூர்த்திகள் திருவெண்பாக்கம் சென்று கடவுளை வணங்கித் தமது பார்வை மறைந்ததைக் கூறி வருந்தினார். அப்போது இறைவன் அவருக்கு ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தருளினார். அப்போது அவர் பாடிய பாடல்கள் மேலும் மனத்தை யுருக்குவன.
“பிழையுளன பொறுத்திருவர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு காதா! கோயிலுளாயே? என்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.”
இவ்வாறு அவலச்சுவை ததும்பப் பாடிய இவர், காஞ்சீபுரம் சென்று திருவேகம்பரை வணங்கியபோது இவருக்கு ஒரு கண் பார்வை தெரிந்தது. இதனைத் திருவேகம்பப் பதிகத்தின் பதினொரு பாடலிலும்,