பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மருத்துவ விஞ்ஞானிகள்


இரண்டாகக் கிழித்துக் கொண்டே ஓடும் கப்பலைக் கண்டான்; கடல் வணிகத்தைப் பெருக்கி உலகையே பொருளாதாரத்தோடு போட்டிப் போடும் துறைமுகங்களாக்கிக் கொண்டான்:

ஆயிரம் நிலவே வா!’ என்று வெண்ணிலாவை அழைத்து வேல் விழியர் காதல் நெஞ்சத்தோடு நீந்தி விளையாடிய மனிதன், இன்று நிலாவையே எதிர்த்து சந்திர மண்டலத்தில் நடனமாடி கலை நிலாவிலே கவின்மிகு விஞ்ஞானங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றான்!

இந்த அறிவுப் போராட்டம் இன்று நேற்ற துவங்கியது? என்று மனிதன் உலகத்திலே உதிக்கும் கருவாகி, உருவாகி, பிறந்து வளர்ந்து, வாழ முற்பட்டானோ, அன்று முதல் இயற்கைச் சக்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்திக் கொண்டே, புதுப்புது விஞ்ஞான விந்தைகளை உலகின்முன் உருவாக்கிக் கொண்டே இருக்கிறான்.

இந்தப் போராட்டங்களை எல்லாம் மனிதன் ஏன் இயற்கையை எதிர்த்து ஈடுபட்டு நடத்தி வருகின்றான்? மனித இனம் இயற்கையிலே உள்ள அறிவியல் நுட்பங்களைக் கண்டு பிடித்து உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற அறிவு வேட்கையின் ஆர்வத்தாலேதான் - இந்தப் போராட்டங்களை இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றான்.

அந்த முறையில், மனித இனத்தின் முன்னேற்றத்திற்கும் - மறுமலர்ச்சிக்கும் போராடி வரும் போராட்டங்களில் ஒன்றுதான் மருத்துவத் துறையின் புதுமைகளைக் கண்டுபிடிக்கும் அறிவியல் ஆராய்ச்சிப் போராட்டம் ஆகும்.

மருத்துவத் துறையில் எண்ணற்ற வைத்திய வித்தகர்கள் தோன்றித் தோன்றி அவ்வப்போது அவர்களால் கண்டுபிடித்த மருந்துகளால்தான், உடற் கூறு விஞ்ஞானத்தின் ஊடுருவல் கருவிகளால்தான், மனித இனம் இன்றும் முன்னேறிக் கொண்டே இருக்கின்றது.